மாட்டு வண்டிகளில் மணல் அள்ள சட்ட ரீதியாக அனுமதி

புதுவையில்  மாட்டு வண்டிகளில் மணல் அள்ள செப். 17-ஆம் தேதி முதல் சட்ட ரீதியாக அனுமதி வழங்கப்படும் என்று புதுவை முதல்வர் வே.நாராயணசாமி உறுதியளித்தார்.

புதுவையில்  மாட்டு வண்டிகளில் மணல் அள்ள செப். 17-ஆம் தேதி முதல் சட்ட ரீதியாக அனுமதி வழங்கப்படும் என்று புதுவை முதல்வர் வே.நாராயணசாமி உறுதியளித்தார்.
புதுவை சட்டப்பேரவையில் முதல்வர் நாராயணசாமியிடம்  இந்திய தொழில்சங்க மைய (சிஐடியு) தலைவர் முருகன்,  செயலர் சீனுவாசன் உள்ளிட்ட  நிர்வாகிகள் வெள்ளிக்கிழமை சந்தித்து அளித்த மனு அளித்த போது அவர் இவ்வாறு கூறினார்.
மனுவின் விவரம்: புதுச்சேரியில் அரசு கட்டுமான பணிகளுக்கும், அரசின் திட்டப் பணிகளுக்கும் மக்கள் பயன்பாட்டுக்கும்,  காமராஜர் கல்வீடு கட்டும் திட்டம், வீடு தோறும் கழிப்பறை போன்ற அனைத்துக் கட்டுமான பணிகளும் கடந்த 2 ஆண்டுகளாக மணல் தட்டுப்பாட்டால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக கட்டுமான தொழிலாளர்கள் வேலையின்றி தவித்து வருகின்றனர். 
புதுவை ஆற்றங்கரையோரம் மாட்டு வண்டிகளை வைத்து மணல் அள்ளி வாழ்க்கை நடத்தி வந்த சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கடும் நெருக்கடியைச் சந்தித்து வருகின்றனர். புதுவை அரசு ஆற்றில் மணல் அள்ளத் தடை விதித்து ஆற்றுப் பகுதிகளில் துப்பாக்கி ஏந்திய காவலர்களை நிறுத்தியுள்ளது. மறுகரையில் தமிழகப் பகுதியான கடலூர் மாவட்டத்தில் அதன் ஆட்சியர் மாட்டு வண்டி தொழில்சங்கத்தினர் மூலம் பேச்சுவார்த்தை நடத்தி, மாவட்ட மாட்டு வண்டித் தொழிலாளர்களுக்கு மணல் குவாரி அமைத்துக் கொடுத்துள்ளது. தமிழகப் பகுதி மாட்டு வண்டி தொழிலாளர்களுக்கு மட்டும் தான் மணல் எடுக்க அனுமதி அளிக்கப்படுகிறது. புதுவை மாட்டு வண்டிகளுக்கு மணல் அள்ள உரிமம் அளிப்பது இல்லை. ஒரே ஆற்றுப் படுகையில் தமிழக அரசு அனுமதிப்பதும்,  மறுகரையில் மணல் எடுக்க புதுவை அரசு மறுப்பதுமாக உள்ளது. இதனால், புதுச்சேரியில் கட்டுமான தொழிலின் வாழ்வாதாரம் கேள்வி குறியாக்கப்படுகிறது.
மழை காலத்துக்கு முன்பாக குவாரி அமைத்து கொடுத்து மாட்டு வண்டிகளுக்கு உரிமம் வழங்கி உள்ளூர் மணல் தேவையை நிறைவு செய்ய வேண்டும். மேலும், பறிமுதல் செய்யப்பட்ட மாட்டு வண்டிகளை விடுவிக்க வேண்டும் என அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
மனுவைப் பெற்றுக் கொண்ட முதல்வர் நாராயணசாமி உடனடியாக அமைச்சர் ஷாஜகானை தொலைபேசியில் தொடர்பு கொண்டார். அவரிடம் இந்தப் பிரச்னைக்கு மழை காலத்துக்கு முன்பாக உரிய தீர்வு காண வலியுறுத்தினார். அதன் பின்னர்,  வருவாய்த் துறை மூலம் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு,  குறிப்பிட்ட பகுதிகளில் சட்ட ரீதியாக மணல் அள்ளிக் கொள்ள செப். 17-ஆம் தேதி முதல் மாட்டு வண்டிகளுக்கு பாசிக் மூலம் அனுமதி வழங்கப்படும் என முதல்வர்
 உறுதியளித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com