சுற்றுலா வளர்ச்சிக் கழக ஊழியர்கள் போராட்டம்

புதுச்சேரி சுண்ணாம்பாறு படகு குழாமுக்கு விதிமுறைக்கு மாறாக புதிய மேலாளர் நியமிக்கப்பட்டதாகக்

புதுச்சேரி சுண்ணாம்பாறு படகு குழாமுக்கு விதிமுறைக்கு மாறாக புதிய மேலாளர் நியமிக்கப்பட்டதாகக் கூறி சுற்றுலா வளர்ச்சிக்கழக ஊழியர்கள் செவ்வாய்க்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சுண்ணாம்பாறு படகு குழாமில் மேலாளர் பொறுப்பு வகித்து வந்த ஓ.பி. ஷாஜி என்பவர் கடந்த மார்ச் 31-ஆம் தேதி பணிஓய்வு பெற்றார். இதையடுத்து, இந்தப் பொறுப்புக்கு, ஷாஜிக்கு அடுத்த நிலையில் இருந்த பி. மனோஜ் என்பவருக்கு பதவி மூப்பு அடிப்படையில் படகு குழாம் மேலாளர் பொறுப்பு வழங்கப்பட வேண்டும். 
ஆனால், சுற்றுலா வளர்ச்சிக் கழக மேலாண் இயக்குநர், படகு ஓட்டுநர் ஒருவருக்கு விதிமுறைகளை மீறி படகு குழாம் மேலாளர் பதவியை வழங்கியதாகக் கூறி, சுற்றுலா வளர்ச்சிக் கழக ஊழியர்கள் திங்கள்கிழமை பணிப்புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து, பேச்சுவார்த்தை நடத்த அரசு ஊழியர்கள் சம்மேளன கெளரவத் தலைவர் சி.எச். பாலமோகனன் தலைமையில் ஊழியர்கள், சுற்றுலா வளர்ச்சிக்கழக மேலாண் இயக்குநர் முருகேசனை செவ்வாய்க்கிழமை காலை சந்தித்துப் பேசினர்.
 ஆனால், மேலாண் இயக்குநர் உரிய முடிவை அறிவிக்கவில்லை எனக் கூறப்படுகிறது. 
இதைத் தொடர்ந்து, அரசு ஊழியர்கள் சம்மேளனத்தின் தலைவர் பாலமோகனன், மேலாண் இயக்குநரின் அறையில் அமர்ந்து தர்னாவில் ஈடுபட்டார். ஊழியர்கள் அலுவலகத்துக்கு வெளியே போராட்டத்தில் ஈடுபட்டதாகத் தெரிகிறது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து தகவலறிந்து வந்த பெரியகடை போலீஸார், போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தினர். 
இதில், சுற்றுலா வளர்ச்சிக்கழக மேலாண் இயக்குநர் புதன்கிழமை பேச்சுவார்த்தை நடத்தி உரிய முடிவை அறிவிப்பார் எனக் கூறியதை அடுத்து, போராட்டத்தில் ஈடுபட்ட ஊழியர்கள் கலைந்து சென்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com