சீயமங்கலம் கோயிலுக்கு தமிழ் ஆர்வலர்கள் வரலாற்று களப்பயணம்

புதுவை தமிழ்ச் சான்றோர், இலக்கியப் பொழில் இலக்கிய மன்றம், இலக்கியச் சோலை தமிழ் மன்றம் இணைந்து

புதுவை தமிழ்ச் சான்றோர், இலக்கியப் பொழில் இலக்கிய மன்றம், இலக்கியச் சோலை தமிழ் மன்றம் இணைந்து நடத்திய தமிழ் ஆர்வலர்கள், பாவலர்களின் வரலாற்றுக் களப்பயணம் வந்தவாசி தேசூர் அருகே சீயமங்கலத்தில் அண்மையில் நடைபெற்றது. 
வந்தவாசி அருகே சிம்மவிஷ்ணு சதுர்வேதி மங்கலம் என்றழைக்கப் பெற்ற சீயமங்கலம் எனும் ஊரில் உள்ள தூணாண்டவர் கோயிலுக்குக் கவிமாமணி நெய்தல் நாடன் தலைமையில் தமிழ் ஆர்வலர்கள், பாவலர்கள் அடங்கிய 35 பேர் கொண்ட குழு மேற்கண்ட களப்பயணத்தில் பங்கேற்றது.
முன்னதாக, ஓடும் பேருந்தில் தேர்தலோ தேர்தல் என்ற தலைப்பில் பா புனையும் போட்டி நடைபெற்றது. இதில் 25 பாவலர்கள் பங்கேற்று, இரண்டு மணிநேரத்துக்குள் 
பா எழுதி முடித்தனர். 
இதில் சிவ. இளங்கோ, சுந்தர. சேகர், கோவி. மாசிலாமணி ஆகியோர் முதல் மூன்று இடங்களைப் பிடித்தனர். வை. ராமதாசுகாந்தி, ச. ராஜேந்திரன், கெளசல்யாதேவி, வீர. முருகையன், வ. ஆறுமுகம், பி.எம். சிவாஜி ஆகியோர் ஆறுதல் பரிசு பெற்றனர்.
தொடர்ந்து, அரங்க. விஜயரங்கம் வழிகாட்டுதலில் திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி வட்டத்தில் உள்ள சீயமங்கலத்தில் முதலாம் நரசிம்ம பல்லவன் நினைவாக 6-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட கோயிலை ஆர்வலர்கள் பார்வையிட்டனர். 
இக்கோயிலே சிவன் கால்மாற்றி நடனமாடும் நிலையில் முதன்முதலில் கல்லில் புடைச்சிற்பமாக கட்டப்பட்டது எனக் கூறப்படுகிறது.
தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள ஒரே கல்லில் செதுக்கப்பட்டுள்ள இக்குடைவரைக் கோயிலில் உள்ள இறைவன் தூணாண்டவர் எனும் பெயரில் வணங்கப்படுகிறார். தாயார் மரகதவல்லி தனி சன்னதியில் அருள்பாலிக்கிறார்.
கோயில் வளாகத்தில் தமிழ்மாமணி துரை. மாலிறையன் தலைமையில் நடைபெற்ற பாவரங்கில் அரங்க. முருகையன், கோவி. மாசிலாமணி, வை. ராமதாசுகாந்தி, வடுகை கு. கண்ணன், வீர. முருகையன் உள்ளிட்ட பாவலர்கள் தமிழன் என்றொரு இனமுண்டு என்ற தலைப்பில் கவிதை வாசித்தனர். இதில் பங்கேற்றவர்களுக்கு பெ. பராங்குசம் சான்றிதழ் வழங்கிப் பாராட்டினார்.
பின்னர், கங்கமன்னன் இரண்டாம் ராஜமல்லனால் 9-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட தீர்த்தங்கரர்கள் உருவங்கள் பொறிக்கப்பட்ட சமணக்குடைவரைக் கோயிலையும் ஆர்வலர்கள் பார்வையிட்டனர். இதில் பேராசிரியர் ஆனந்தன், 
கோ. கலியபெருமாள், சுந்தரசேகர், வ.ஆறுமுகம், முத்து ஐயாச்சாமி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com