மத்தியில் ஆட்சி நடத்தியபோது புதுவைக்கு மாநில அந்தஸ்தை காங்கிரஸ் ஏன் வழங்கவில்லை? அதிமுக கேள்வி
By DIN | Published On : 04th April 2019 10:00 AM | Last Updated : 04th April 2019 10:00 AM | அ+அ அ- |

மத்தியில் ஆட்சி நடத்தியபோது புதுவைக்கு மாநில அந்தஸ்தை காங்கிரஸ் அரசு ஏன் வழங்கவில்லை என்று புதுவை சட்டப்பேரவை அதிமுக குழுத் தலைவர் ஆ.அன்பழகன் கேள்வி எழுப்பினார்.
இது குறித்து புதன்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:
புதுவையில் மூன்று ஆண்டுகால காங்கிரஸ் அரசு மக்கள் நலத் திட்டங்கள் எதுவும் நிறைவேற்றவில்லை.
மக்கள் மத்தியில் பெரும் அதிருப்தி இருந்து வருகிறது.இந்த அதிருப்தியில் இருந்து மக்களை ஏமாற்றும் நோக்கில் காங்கிரஸ் தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது.
காங்கிரஸ் கட்சி சார்பில் இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி, நரசிம்மராவ், மன்மோகன்சிங் ஆகியோர் பிரதமர்களாக இருந்தபோதும், மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்றவோதும் மாநில அந்தஸ்து வழங்கவில்லை. ஆனால், ஜெயலலிதா வலியுறுத்தியதால் வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது, புதுவைக்கு மாநில அந்தஸ்து வழங்க மத்திய அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்ற வைத்தார்.
மருத்துவக் கல்லூரியில் மாணவர்களை சேர்ப்பதற்காக மக்களவையில் நீட் தேர்வு மசோதாவை அறிமுகப்படுத்தியது காங்கிரஸ் அரசுதான்.
அப்போது, நீட் தேர்வில் இருந்து தமிழகம், புதுவைக்கு விலக்கு அளிக்கப்படும் என்று மசோதாவில் அறிவித்தார்களா.
எனவே, தேர்தல் அறிக்கையில் நீட் தேர்வை எதிர்க்கும் மாநிலங்களுக்கு விலக்கு அளிப்போம் என்பது ஏமாற்று வேலை.
நாடு முழுவதும் 34 லட்சம் அரசுப் பணியிடங்கள் நிரப்பப்படும் என தேர்தல் அறிக்கையில் உள்ளதை பெருமை கொள்ளும் புதுவையில் காங்கிரஸ் கட்சி, 8,300 அரசு காலியிடங்கள் இருந்தும் ஏன் நிரப்பவில்லை?
தினமும் என்னுடன் விவாதிக்க தயாரா என ரங்கசாமியை, முதல்வர் நாராயணசாமி அழைக்கிறார்.
ஆட்சியின் செயல்பாடுகள் குறித்து விவாதம் செய்ய சட்டப்பேரவை இருக்கிறது.
சட்டப்பேரவையை கூட்டி விவாதம் நடத்த அழைத்தால் முதல்வர் தயாராக இல்லை என்றார் அன்பழகன்.