என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளர் மீது உள்நோக்கத்துடன் விமர்சனம்: ரங்கசாமி குற்றச்சாட்டு

என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளர் கே.நாராயணசாமி மீது உள்நோக்கத்துடன் காங்கிரஸ் கட்சியினர் விமர்சனம் செய்து வருவதாக எதிர்க்கட்சித் தலைவர் என்.ரங்கசாமி குற்றஞ்சாட்டினார்.

என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளர் கே.நாராயணசாமி மீது உள்நோக்கத்துடன் காங்கிரஸ் கட்சியினர் விமர்சனம் செய்து வருவதாக எதிர்க்கட்சித் தலைவர் என்.ரங்கசாமி குற்றஞ்சாட்டினார்.
 தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம் பெற்றுள்ள என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளர் கே.நாராயணசாமியை ஆதரித்து ஏம்பலம் பேரவைத் தொகுதியில் புதன்கிழமை மாலை பிரசாரம் மேற்கொண்டு ரங்கசாமி பேசியதாவது:
 கூட்டுறவு சக்கரை ஆலை, பாப்ஸ்கோ, பாசிக் மதுபானக் கடை உள்ளிட்டவைகளை மூடிவிட்டு, என்னை மூடுவிழா நாயகன் என்று காங்கிரஸ் கட்சியினர் விமர்சனம் செய்கின்றனர்.
 அரசு நடத்தும் நிறுவனத்தை எல்லாம் தனியாருக்கு கொடுக்கலாமா என்று ஆளும் கட்சியினர் யோசனை செய்கின்றனர். தனியார் ஆலைக்கு கரும்பை கொண்டு சென்றால் எடையில் ஏமாற்றுவார்கள் என்று விவசாயிகள் பயப்படுகின்றனர். கூட்டுறவு சர்க்கரை ஆலையில் பணம் தாமதம் ஆனாலும் எடை சரியாக இருக்கும்.
 என்.ஆர்.காங்கிரஸ் சார்பில் வேட்பாளராக இளைஞர் நிறுத்தப்பட்டுள்ளார். அவரது கல்வி நிறுவனங்களுக்கு பல்கலைக்கழக அந்தஸ்து வாங்குவதற்காக நிறுத்தப்பட்டுள்ளதாக ஆளும் கட்சியினர் விமர்சனம் செய்கின்றனர். அதற்கும் மக்களவைத் தேர்தலில் போட்டியிடுவதற்கும் என்ன தொடர்பு உள்ளது?
 வேண்டும் என்றே உள்நோக்கத்துடன் விமர்சனம் செய்கின்றனர்.
 இவர்கள் கூற்றுப்படி, இதற்கு முன்பு 18 ஆண்டுகளாக மாநிலங்களவை உறுப்பினராகவும், மத்திய அமைச்சராகவும் இருந்தவர் என்னென்ன வாங்கியுள்ளார் என்பதை மக்களுக்கு விளக்க வேண்டும். அனுபவர் இல்லை என்று கூறுகின்றனர். தற்போது அனுபவம் உள்ளவர் எதில் அனுபவம் உள்ளவர் என்றும் என்னென்ன செய்தார் என்றும் மக்களுக்குத் தெரியும்.
 இளைஞர் வெற்றி பெற்றால் அனைத்துப் பணிகளையும் சுறுசுறுப்பாக செய்வார். அரசு ஊழியர்களுக்கு 60 வயது ஆனவுடன் பணி ஓய்வு கொடுக்கப்படுகிறது. அரசியல்வாதிக்கு கிடையாது. ஆனால், அவரால் என்னென்ன வேலை செய்ய முடியுமோ அதுவரை போகலாம். முடியவில்லை என்றால் இளைஞர்களிடம் கொடுப்போம் அவர் வேகமாக செய்வார். உடல்நிலை சரியில்லை என்று அடிக்கடி ஓய்வு எடுக்க முடியாது. இளைஞர்கள் கையில் தான் இந்தியாவின் எதிர்காலம் உள்ளது என்றார் ரங்கசாமி.
 பிரசாரத்தில் அதிமுக பேரவைக் குழுத் தலைவர் ஆ.அன்பழகன் மற்றும் கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com