தேர்தல் விழிப்புணர்வுப் பேரணி
By DIN | Published On : 12th April 2019 08:09 AM | Last Updated : 12th April 2019 08:09 AM | அ+அ அ- |

புதுவை மாநில தேர்தல் துறை சார்பில், முறைப்படுத்தப்பட்ட வாக்காளர் கல்வி அமைப்பு (ஸ்வீப்), பெருந்தலைவர் காமராஜர் கலை - அறிவியல் கல்லூரி ஆகியவை இணைந்து நடத்திய தேர்தல் விழிப்புணர்வுப் பேரணி, மதகடிப்பேட்டையில் வியாழக்கிழமை நடைபெற்றது.
பேரணியை ஸ்வீப் அமைப்பின் ஆலோசகர் இரா.நெடுஞ்செழியன், மாநில ஒருங்கிணைப்பாளர் கோவிந்தசாமி ஆகியோர் கொடியசைத்துத் தொடக்கி வைத்தனர்.
பேரணியில் 200-க்கும் மேற்பட்ட பெருந்தலைவர் காமராஜர் கலைக் கல்லூரியைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் பங்கேற்று, நூறு சதவீத வாக்குப்பதிவு, வாக்காளர் என்பதில் பெருமை கொள்வோம், என் வாக்கு விற்பனைக்கு அல்ல உள்ளிட்ட விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கைகளில் ஏந்தியபடியும், முழக்கமிட்டபடியும் சென்றனர்.
பேரணி, மதகடிப்பேட்டையின் பல முக்கிய வீதிகளில் வழியாகச் சென்று பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தியது.
அப்போது, மக்களவைத் தேர்தலை முன்னிட்டு, தேர்தல் ஆணையம் அறிமுகப்படுத்திய விவிபாட், 1950 அழைப்பு மையம், சிவிஜில் செயலி, வாக்காளர் உதவி மைய செயலி ஆகிய தகவல் தொழில்நுட்ப வசதிகள் குறித்து பொதுமக்களுக்கு விரிவாக எடுத்துரைக்கப்பட்டது.