நூறு சதவீத வாக்குப் பதிவுக்கு மாணவர்களின் ஒத்துழைப்பு தேவை: பல்கலை. பதிவாளர்

நூறு சதவீத வாக்குப் பதிவுக்கு மாணவர்களின் ஒத்துழைப்பு தேவை என்று புதுவை பல்கலைக்கழகப் பதிவாளர் சித்ரா கூறினார்.

நூறு சதவீத வாக்குப் பதிவுக்கு மாணவர்களின் ஒத்துழைப்பு தேவை என்று புதுவை பல்கலைக்கழகப் பதிவாளர் சித்ரா கூறினார்.
புதுவைப் பல்கலைக்கழக ஆனந்தரங்கர் நூலக வளாகத்தில், மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு, தேர்தல் துறை சார்பில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம்,  விவிபாட் இயந்திரத்தின் செயல்பாடுகள் குறித்து விளக்கும் நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.
இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சிக்குப் பல்கலை.  நூலகர் சம்யுக்தா தலைமை வகித்தார். தேர்தல் துறையின் காலாப்பட்டு பகுதிக்கான  தேர்தல் நடத்தும் அதிகாரிகள் பக்கிரிசாமி, விசாகன்,  கார்த்திகேயன் உள்ளிட்டோர் செயல் விளக்கம் அளித்தனர்.
முன்னதாக நடைபெற்ற தொடக்க விழாவில் பல்கலைக்கழகப் பதிவாளர் சித்ரா சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு பேசியதாவது: 
முதல் முறையாக வாக்களிக்கவுள்ள இளம் வாக்காளர்கள் வாக்கின் முக்கியத்துவத்தை உணர்ந்து தங்களது ஜனநாயகக் கடமையை ஆற்ற வேண்டும்.
நாட்டின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு, அனைவரும் நேர்மையுடன் வாக்களிக்க வேண்டும். மேலும், தங்களது குடும்பத்தில் உள்ள அனைவரும் வாக்களிக்க மாணவர்கள் உறுதுணையாக இருக்க வேண்டும்.
நேர்மையான முறையில் வாக்களிப்பதே ஜனநாயகத்தின் அடிப்படை. அதனால், மாணவர்கள் நேர்மையுடன், யாருக்கும் அஞ்சாமல் வாக்களித்து நாட்டை வளர்ச்சிப் பாதைக்கு இட்டுச் செல்ல வேண்டும். 
மாணவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து வாக்களித்தால் நூறு சதவீத வாக்களிப்பு இலக்கை நிச்சயம் அடைய முடியும் என்றார் அவர்.
செயல் விளக்க நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாக்குச் சாவடியிலும் மாற்றுத் திறனாளிகளுக்காக, குறிப்பாக பார்வையற்றவர்களுக்காக ஏற்படுத்தப்பட்டுள்ள சிறப்பு வசதிகள் குறித்து விளக்கமளிக்கப்பட்டது.
நிகழ்வில் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த அனைத்துத் துறை சார்ந்த மாணவர்கள் கலந்து கொண்டு, மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம், விவிபாட் இயந்திரத்தை பரிசோதனை அடிப்படையில் இயக்கிப் பார்த்து, பல்வேறு சந்தேகங்களை எழுப்பினர். 
அவர்களின் சந்தேகங்களுக்கு தேர்தல் துறை அதிகாரிகள் விளக்கம் அளித்தனர். இதைத் தொடர்ந்து மாணவர்கள், தேர்தல் துறை அதிகாரிகளின் கலந்துரையாடல்  நடைபெற்றது. 
நிகழ்வில் பல்கலை.யின் பல்வேறு துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள், நூலக அதிகாரிகள், ஊழியர்கள், மாணவர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com