பொதுத் துறை நிறுவனங்களை தனியார் மயமாக்கும் முடிவைக் கைவிட வேண்டும்: அரசு ஊழியர்கள் சம்மேளனம் வலியுறுத்தல்
By DIN | Published On : 14th April 2019 01:54 AM | Last Updated : 14th April 2019 01:54 AM | அ+அ அ- |

பொதுத் துறை நிறுவனங்களை தனியார் மயமாக்கும் முடிவைக் கைவிட வேண்டும் என புதுச்சேரி அரசு ஊழியர் சங்கங்களின் சம்மேளனம் வலியுறுத்தியது.
இதுகுறித்து சம்மேளனத்தின் பொதுச் செயலர் கே. ராதாகிருஷ்ணன், புதுவை மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் கட்சிகள், சுயேச்சை வேட்பாளர்களிடம் அரசு ஊழியர் சம்மேளனத்தின் எதிர்பார்ப்புகள் என்ற தலைப்பில் வெளியிட்ட அறிக்கை:
புதுவை அரசு, மத்திய அரசுக்கு அளிக்க வேண்டிய கடன், வட்டி தொகை முழுவதையும் தள்ளுபடி செய்து, புதுவை மாநிலம், பொருளாதார அடிப்படையில் மேம்படும் வகையில் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். காலியாக உள்ள அனைத்துப் பணியிடங்களையும் நிரப்ப வேண்டும். அனைத்து தினக் கூலி, பகுதி நேர, ஒப்பந்த, தொகுப்பூதிய, வவுச்சர் ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். பணி நிரந்தரம் செய்யும் வரை சம வேலைக்கு சம ஊதியம் என்ற உச்ச நீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்த வேண்டும்.
வங்கி, காப்பீடு உள்ளிட்ட பொதுத் துறை நிறுவனங்களை தனியார் மயமாக்குவதை கைவிட வேண்டும். மேலும், பொதுத் துறை நிறுவனங்கள், அரசுத் துறைகளில் அவுட்சோர்சிங் முறைகளைக் கைவிட வேண்டும்.
அங்கன்வாடி போன்ற மக்கள் சுகாதார நலன் சார்ந்த திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீட்டை அதிகப்படுத்த வேண்டும். அந்தத் திட்டங்களை தனியாருக்கு தாரை வார்ப்பதைக் கைவிட வேண்டும்.
தொழிலாளர் நலச் சட்டங்களை பேணுவதற்கு போராட வேண்டிய சூழ்நிலையில், அதை தனியார் நிறுவனங்களுக்கு சாதகமாக திருத்த வேண்டும் என்ற கருத்தாக்கத்தை மறுபரிசீலனை செய்து, தொழிலாளர் நலன் காக்கும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.