குருத்தோலை ஞாயிறு: கிறிஸ்தவர்கள் சிறப்பு பிரார்த்தனை

புதுச்சேரியில் குருத்தோலை ஞாயிறையொட்டி, கிறிஸ்தவ தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.

புதுச்சேரியில் குருத்தோலை ஞாயிறையொட்டி, கிறிஸ்தவ தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.
 இயேசு கிறிஸ்து மக்களுக்காக பட்ட துன்பங்களையும், சிலுவையில் அறையப்பட்டதையும் நினைவு கூரும் வகையில், 40 நாள்கள் தவக்காலத்தை கிறிஸ்தவர்கள் ஆண்டுதோறும் கடைப்பிடித்து வருகின்றனர்.
 நிகழாண்டு சாம்பல் புதன் மார்ச் 6-ஆம் தேதி அனுசரிக்கப்பட்டது. அது முதல் கிறிஸ்தவர்கள் தினமும் காலை, மதியம் உணவு அருந்தாமல் விரதத்தைக் கடைப்பிடித்து பிரார்த்தனையில் ஈடுபட்டு வருகின்றனர். தவக்காலத்தின் கடைசி வாரம், அதாவது ஈஸ்டர் தினத்துக்கு முந்தைய வாரம் புனித வாரமாகக் கடைப்பிடிக்கப்படுகிறது.
 புனித வாரத்தின் தொடக்க நாள் தான் குருத்தோலை ஞாயிறு. இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்படுவதற்கு முன்பு ஜெருசலேம் வீதிகளில் அவரை ஒரு கழுதை மேல் அமர்த்தி ஊர்வலமாக அழைத்துச் சென்றனர். அப்போது, வழிநெடுகிலும் மக்கள் குருத்தோலைகளை கையில் பிடித்து ஓசன்னா பாடல்களைப் பாடினர். அதை நினைவு கூரும் வகையில், குருத்தோலை ஞாயிறு கிறிஸ்தவ தேவாலயங்களில் ஞாயிற்றுக்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது.
 புதுச்சேரியில் புனித ஜென்மராக்கினி அன்னை பேராலயம், புனித இதய ஆண்டவர் பசிலிக்கா, நெல்லித்தோப்பு விண்ணேற்பு மாதா ஆலயம், வில்லியனூர் புனித லூர்து அன்னை ஆலயம் உள்ளிட்ட கத்தோலிக்க ஆலயங்களில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.
 மேலும், அரசு மருத்துவமனை அருகே உள்ள சிஎஸ்ஐ தூய யோவான் தேவாலயம், கோரிமேடு சிஎஸ்ஐ தேவாலயம் உள்ளிட்டவற்றிலும் குருத்தோலை பவனி, சிறப்பு பிரார்த்தனை ஆகியவை நடைபெற்றன.
 முன்னதாக, நெல்லித்தோப்பு புனித விண்ணேற்பு அன்னை ஆலயத்தில் நடைபெற்ற குருத்தோலை பவனி, சிறப்பு பிரார்த்தனையில் முதல்வர் வே.நாராயணசாமி, புதுவை அரசின் தில்லி சிறப்பு பிரதிநிதி ஏ.ஜான்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர். வருகிற 18-ஆம் தேதி பெரிய வியாழனும், 19-ஆம் தேதி பெரிய வெள்ளியும் (இயேசு சிலுவையில் அறையப்பட்ட நாள்) கடைப்பிடிக்கப்படுகிறது.
 இதைத் தொடர்ந்து ஏப். 21-ஆம் தேதி ஈஸ்டர் திருநாள் கொண்டாடப்பட உள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com