புதுவை அரசுக்கு மக்கள் குறித்த சிந்தனை இல்லை: என். ரங்கசாமி

புதுவை அரசுக்கு மக்கள் குறித்த சிந்தனை இல்லை என்று எதிர்க்கட்சித் தலைவர் என்.ரங்கசாமி கூறினார்.

புதுவை அரசுக்கு மக்கள் குறித்த சிந்தனை இல்லை என்று எதிர்க்கட்சித் தலைவர் என்.ரங்கசாமி கூறினார்.
 புதுவை மக்களவைத் தொகுதியில், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் என்.ஆர்.காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் கே.நாராயணசாமியை ஆதரித்து உழவர்கரை தொகுதியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பிரசாரத்தில் ரங்கசாமி பேசியதாவது:
 கருத்துக் கணிப்புகளில் பாஜக அதிக இடங்களைப் பெறும் என்று கூறப்படுகிறது. மத்தியில் அமையும் ஆட்சியுடன் ஒத்துப்போகும் கட்சி புதுவையிலும் வெற்றி பெற்றால்தான் வளர்ச்சி ஏற்படும். புதுவையில் கடந்த மூன்று ஆண்டு கால காங்கிரஸ் ஆட்சியியில் மத்திய அரசையும், ஆளுநரையும், எதிர்க்கட்சிகளையும் குறை சொல்லியே காலத்தை கடத்திவிட்டனர். எந்தத் திட்டங்களையும் நிறைவேற்றவில்லை.
 மாநிலத்தில் ஆளும் காங்கிரஸ் அரசுக்கு புதுவை மக்களுக்கு என்ன செய்ய வேண்டும் என்பது பற்றிய சிந்தனையில்லை. நடைமுறையில் இருந்த திட்டங்களையும் செய்யவில்லை. புதிய திட்டங்களையும் மேற்கொள்ளவில்லை.
 தேர்தல் வாக்குறுதிகள் ஒன்றைக்கூட அவர்கள் நிறைவேற்றவில்லை. இளைஞர்கள் வேலைவாய்ப்புப் பெற ஒரு தொழில்சாலைகளைக் கூட காங்கிரஸ் அரசு கொண்டு வரவில்லை. அரசுப் பணியிடங்களும் நிரப்பப்படவில்லை. இலவச துணி, அரிசி வழங்கவில்லை. கல் வீடு கட்டுவதற்கான நிதியுதவி சரியாக வழங்கவில்லை.
 புதுவையின் வளர்ச்சி தடுக்கப்பட்டு சீரழிக்கப்பட்டுள்ளது. இலவச துணி, அரிசியை ஏன் வழங்கவில்லை என்று கேட்டால், மத்தியில் ராகுல் காந்தி பிரதமரானவுடன் வழங்குவோம் என்று கூறுகின்றனர்.
 துணைநிலை ஆளுநரின் அதிகாரங்கள் குறித்து முதல்வர் நாராயணசாமிக்கு நன்றாகத் தெரியும். அவ்வாறு இருக்கையில், ஆளுநரிடம் மோதல் போக்கை கடைப்பிடிக்காமல், சாதுர்யமான முறையில் அணுகி, மக்களுக்கான திட்டங்களை நிறைவேற்ற வேண்டும். அவ்வாறு செய்ய முடியாவிட்டால், பதவியை ராஜிநாமா செய்ய வேண்டும்.
 கடந்த மூன்று ஆண்டு கால ஆட்சியில் முதியோர் உதவித் தொகை உயர்த்தப்படவில்லை. மீனவர்களுக்கு வழங்க வேண்டிய காப்பீட்டுத் தொகையைக்கூட வழங்கவில்லை. மக்கள் நலத் திட்டங்களை நிறைவேற்ற என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளருக்கு மக்கள் ஆதரவு தர வேண்டும் என்றார் ரங்கசாமி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com