சுடச்சுட

  

  மேக்கேதாட்டு விவகாரத்தில் தமிழக முதல்வர் பொய் பிரசாரம்: புதுவை முதல்வர் குற்றச்சாட்டு

  By DIN  |   Published on : 16th April 2019 08:21 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  மேக்கேதாட்டு விவகாரத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி பொய் பிரசாரம் செய்து வருவதாக புதுவை முதல்வர் வே.நாராயணசாமி குற்றஞ்சாட்டினார்.
  இதுகுறித்து மாநில காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களுக்கு திங்கள்கிழமை அவர் அளித்த பேட்டி:
  புதுவையில் எதிர்க்கட்சியான என்.ஆர். காங்கிரஸ்,  தேர்தல் பிரசாரத்தின் போது, காங்கிரஸ் அரசு மக்கள் நலத் திட்டங்களை நிறைவேற்றவில்லை, திட்டங்கள் தாமதமாக நிறைவேற்றப்படுகின்றன என்பன போன்ற உண்மைக்கு புறம்பான குற்றச்சாட்டுகளை கூறி வருகிறது. 
  இதற்கு மக்கள் மத்தியில் நாங்கள் பதிலளித்து வருகிறோம்.
  என்.ஆர். காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் இலவச அரிசி 60 மாதங்களில் 20 மாதங்கள் மட்டுமே வழங்கப்பட்டது. இதற்கு அவர்கள் 3 ஆண்டுகளுக்கு செலவு செய்த தொகை  ரூ.193 கோடி.
  ஆனால், இலவச அரிசி வழங்குவதற்கு தற்போது துணைநிலை ஆளுநர் கிரண் பேடி முட்டுக்கட்டை போட்டாலும், நாங்கள் முனைந்து கடந்த 3 ஆண்டுகளில் ரூ.305 கோடிக்கு இலவச அரிசி வழங்கியுள்ளோம்.
  இது, என்.ஆர்.காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் வழங்கப்பட்டதைவிடக் கூடுதலாகும்.
  புதுவையில் ஏழைக் குடும்பங்களுக்கு வழங்கப்பட்டு வரும் இலவச அரிசி மார்ச், ஏப்ரல், மே ஆகிய மாதங்களுக்கு ஒப்புதல் பெற்று வந்துவிட்டது.
   ஆனால், தேர்தல் நடத்தை விதிகளைக் காரணம் காட்டி, அரிசி விநியோகத்துக்கு மத்திய தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது. இலவச அரிசி, தேர்தல் முடிந்தவுடன் விநியோகிக்கப்படும்.
  காங்கிரஸ் அரசு முதியோர், விதவை உதவித்தொகையை குறிப்பிட்ட காலத்தோடு அவரவர் வங்கிக் கணக்கில் செலுத்தி வருகிறது. 
  மேலும், தேர்தலுக்குப் பிறகு அமைச்சரவையைக் கூட்டி குடிநீர் வரி,  மின்சாரக் கட்டணம், வீட்டு வரி,  குப்பை வரி ஆகியவை குறைக்கப்படும்.
  புதுவைக்கு மாநில அந்தஸ்து, நீட் தேர்வு ரத்து ஆகியவை காங்கிரஸ், திமுக தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளன. ஆனால், பாஜக தேர்தல் அறிக்கையில் இவை எவையும் குறிப்பிடப்படவில்லை.
  தமிழகத்தில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் பிரசாரத்துக்கு மக்கள் தாங்களாகவே வருகின்றனர். 
  ஆனால், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மக்களை தேடிச் செல்கிறார். தோல்வி பயம் காரணமாகவே அவர் மேக்கேதாட்டு விவகாரத்தில் பொய் பிரசாரம் செய்து வருகிறார் என்றார் நாராயணசாமி.
  பேட்டியின்போது, புதுவை மாநில காங்கிரஸ்  தலைவர் ஆ.நமச்சிவாயம், மக்களவைத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் வெ.வைத்திலிங்கம், லட்சுமிநாராயணன் எம்.எல்.ஏ ஆகியோர் உடனிருந்தனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai