எதிர்க்கட்சிகளின் பலத்தை குறைக்க முயற்சி: ரங்கசாமி குற்றச்சாட்டு

ஆளும் கட்சியின் தவறுகளை மறைக்க எதிர்க்கட்சிகளின் பலத்தை குறைக்க முயற்சி செய்து வருகின்றனர்

ஆளும் கட்சியின் தவறுகளை மறைக்க எதிர்க்கட்சிகளின் பலத்தை குறைக்க முயற்சி செய்து வருகின்றனர் என்று என்.ஆர்.காங்கிரஸ் நிறுவனர் தலைவர் என்.ரங்கசாமி குற்றஞ்சாட்டினார்.
தேசிய ஜனநாயக கூட்டணியில் என்.ஆர்.காங்கிரஸ் சார்பில் புதுச்சேரி மக்களவைத் தொகுதியில்  போட்டியிடும் வேட்பாளர் கே.நாராயணசாமி மற்றும் தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தல் வேட்பாளர் ப.நெடுஞ்செழியன் ஆகியோரை ஆதரித்து தட்டாஞ்சாவடி தொகுதியில் என்.ரங்கசாமி திங்கள்கிழமை பேசியதாவது:
கடந்த மூன்று ஆண்டு காலமாக மக்களுக்கு எந்தவொரு 
நன்மையும் செய்யாத அரசாக காங்கிரஸ் அரசு உள்ளது. 
என்.ஆர்.காங்கிரஸ்  எம்.எல்.ஏ. ஜெயபால், அதிமுக எம்.எல்.ஏ. வையாபுரி மணிகண்டன் ஆகியோர் மீதும் வழக்குப் பதிவு செய்து தகுதி நீக்கம் செய்யலாமா? என்ற எண்ணத்தில் ஆளும் கட்சி  உள்ளது.  ஆட்சியில் நடைபெறும் தவறுகளுக்கு பயந்து, அவைகளை மறைக்க எதிர்க்கட்சிகளின் எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கையை குறைக்கப் பார்க்கின்றனர்.  இதில்தான் இவர்களது கவனம் உள்ளது.
மக்களுக்கான பணிகளையும், திட்டங்களையும் செய்வதில் ஆட்சியாளர்களின் கவனம் இல்லை. கடந்த மூன்று ஆண்டு காலத்தில் ஒரு பைசா கூட முதியோர், விதவைகளுக்கான உதவித்தொகை உயர்த்தப்படவில்லை என்றார் ரங்கசாமி.  பிரசாரத்தின்போது,  அதிமுக பேரவைக் குழுத் தலைவர் ஆ.அன்பழகன் மற்றும் கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com