ஜிஎஸ்டி வரி விதிப்பால் பொருளாதாரம் பாதிப்பு: முதல்வர் நாராயணசாமி

ஜிஎஸ்டி வரி விதிப்பால் நாட்டின் பொருளாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது என்று முதல் நாராயணசாமி குற்றஞ்சாட்டினார்.

ஜிஎஸ்டி வரி விதிப்பால் நாட்டின் பொருளாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது என்று முதல் நாராயணசாமி குற்றஞ்சாட்டினார்.
மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி சார்பில், புதுச்சேரி மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் வெ.வைத்திலிங்கத்துக்கு ஆதரவாக,  முதல்வர் வே.நாராயணசாமி புதுச்சேரி பெரிய மார்க்கெட்டில் திங்கள்கிழமை பிரசாரம் மேற்கொண்டார்.
அப்போது வியாபாரிகளிடம் அவர் கூறியதாவது: 
பிரதமர் நரேந்திர மோடியின் ஜிஎஸ்டி வரியால் வியாபாரிகள் பெரியளவில் பாதிக்கப்பட்டனர்.
அரிசிக்கு வரி இல்லை, ஆனால், அரைத்த மாவுக்கு வரி, இட்லி, தோசை, பொங்கலுக்கு வரி விதிக்கப்பட்டுள்ளது.  தீப்பெட்டிக்கு 28 சதவீத வரி விதிக்கப்பட்டுள்ளது. இந்த வரி விதிப்பால் நாட்டின் பொருளாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது.  
குறிப்பாக, புதுவைக்கு பேரிழப்பு ஏற்பட்டுள்ளது. மத்தியில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்து ராகுல் பிரதமரானால் ஒரே வரி விதிக்கப்படும் என்றார் நாராயணசாமி.
வேட்பாளர் வெ.வைத்திலிங்கம் பேசியதாவது:
பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் மக்களை அலையவிட்டனர்.  நவ.8-ஆம் தேதி நான் திருச்செந்தூர் கோயிலில் இருக்கும்போது, 1000, 500 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பு வந்ததால் மிகவும் அவதிப்பட்டேன்.   இதுபோல, ஒவ்வொருத்தரும் எவ்வளவு கஷ்டப்பட்டனர் என்பதும் தெரியும். அந்த நேரத்தில் வியாபாரிகளின் துன்பம் சொல்லிமாளாது. அதுபோல நாடு முழுவதும் ஒரே வரி என்று ஜிஎஸ்டியை அமல்படுத்தி வியாபாரிகளை கஷ்டத்துக்கு உள்ளாக்கியுள்ளனர்.  நீட் தேர்வு கொண்டு வந்து மாணவர்களை துன்பப்படுத்துகின்றனர். 
இதற்கு முன்பு பெட்ரோல் விலை 6 மாதங்களுக்கு ஒரு முறைதான் உயரும். ஆனால், தற்போது தினமும் இரவு 12 மணிக்கு விலையை உயர்த்துகின்றனர். சமையல் எரிவாயு உருளை ரூ.1000க்கு உயர்ந்துவிட்டது என்றார்.
அதைத் தொடர்ந்து, வைத்திலிங்கமும்,  முதல்வர் நாராயணசாமியும் வியாபாரிகளிடம் துண்டுப் பிரசுரங்களை வழங்கி ஆதரவு கேட்டனர். முதல்வரின் நாடாளுமன்றச் செயலர் க.லட்சுமி நாராயணன்,  மார்க்சிஸ்ட் பிரதேசக் குழு உறுப்பினர் முருகன் மற்றும்  கூட்டணிக் கட்சித்  தலைவர்கள், நிர்வாகிகள் பலர் உடன் சென்றனர்.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com