சுடச்சுட

  

  புதுச்சேரி பல்கலை.யின் 90% இடங்களை புதுவை மாணவர்களுக்கே ஒதுக்க வலியுறுத்தல்

  By DIN  |   Published on : 17th April 2019 06:50 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  புதுச்சேரி பல்கலைக்கழகத்தின் 90 சதவீத இடங்களை புதுவை மாணவர்களுக்கே ஒதுக்க வேண்டும் என புதுவை மாணவர் முன்னணி வலியுறுத்தியுள்ளது.
  இதுகுறித்து பல்கலைக்கழக பதிவாளர் சித்ராவிடம், புதுவை மாணவர் முன்னணி நிர்வாகிகள் சந்தியா, உதய்சங்கர், கணேசமூர்த்தி உள்ளிட்டோர் அளித்த மனு விவரம்: 
  புதுச்சேரி பல்கலைக்கழகம் 1985-ஆம் ஆண்டு காலாப்பட்டு பகுதியில் 870 ஏக்கர் வேளாண் விளை நிலங்கள் மீது அமைக்கப்பட்டது. இப்பல்கலைக்கழகம் அமைப்பதற்காக 870 ஏக்கரில் நடைபெற்று வந்த விவசாயம் கைவிடப்பட்டது. 
  புதுச்சேரி மக்கள் தங்களுடைய கல்வி, வேலைவாய்ப்பு ஆகியவற்றை வளர்த்தெடுக்கும் நோக்கத்தில்தான் இப்பல்கலைக்கழகம் அமைக்கப்படுவதாக அப்போதைய பிரதமர் ராஜீவ் காந்தி வாக்குறுதி அளித்தார். அதன் பெயரிலேயே வேளாண் விளைநிலங்களின் மீது பல்கலைக்கழகம் அமைக்கப்பட்டது. ஆனால், இந்த நோக்கங்கள் தற்போது சரிவர கடைப்பிடிக்கப்படுவதில்லை.
  புதுச்சேரி பல்கலைக்கழகம் வெளிமாநில மாணவர்களால் நிரம்பி வழிந்து கொண்டிருக்கிறது. புதுச்சேரி மக்களுக்காக ஏற்படுத்தப்பட்ட இந்த பல்கலைக்கழகத்தில் பயிலும் புதுச்சேரி மண்ணின் மைந்தர்கள் மிக மிகக் குறைவு. ஏற்கெனவே, தில்லி பல்கலைக்கழகத்தில் அந்த மண்ணின் மக்களுக்கு 85% இடஒதுக்கீட்டை 2017-ஆம் ஆண்டிலிருந்து செயல்படுத்தி வருகின்றனர். இதனால் மத்திய பல்கலைக்கழகமாக இருந்தாலும் கூட, அந்த மண்ணின் மக்கள் படிக்கக் கூடிய சூழ்நிலை உருவாகி இருக்கிறது. 
  இதேபோல, ஆந்திரத்தில் அனைத்து கல்வி நிறுவனங்களிலும் 1978-ஆம் ஆண்டிலிருந்து குடியரசுத் தலைவரின் தனிஆணையின் பேரில் 85 சதவீதம் அந்த மண்ணின் மக்களுக்கே என உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக நீட் தேர்வு ஆந்திரத்தில் மட்டும் பொருந்தாது என்ற நிலை இருக்கிறது.
  எனவே, இந்த நடைமுறைகளை பின்பற்றி புதுச்சேரியிலும் புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் 90 சதவீத இடங்களை புதுச்சேரி மாணவர்களுக்கு ஒதுக்கீடு செய்ய வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai