சுடச்சுட

  

  புதுவையில் தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார்: தலைமை தேர்தல் அதிகாரி தகவல்

  By DIN  |   Published on : 17th April 2019 06:48 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  புதுவை மாநிலத்தில் தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளன என்று மாநில தலைமை தேர்தல் அதிகாரி வி. கந்தவேலு தெரிவித்தார்.
  இதுகுறித்து செய்தியாளர்களிடம் செவ்வாய்க்கிழமை அவர் கூறியதாவது:
   புதுச்சேரி தொகுதி மக்களவைத் தேர்தலில் 236 வெளிநாடு வாழ் இந்தியர்கள், 249 சேவை வாக்காளர்கள் உள்பட 9,73,410 (ஆண் - 4,59,267, பெண் - 5,13,798) வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். 
  இதில் 18 முதல் 19 வயதுடைய முதல்முறை வாக்காளர்கள் 31,905 ( ஆண் - 16,180, பெண் - 15,723, மூன்றாம் பாலினத்தவர் - 2) அடங்குவர். 
  இதேபோல, தட்டாஞ்சாவடி சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் 3 வெளிநாடு வாழ் இந்தியர்கள் உள்பட 29,320 வாக்காளர்கள் (13,848 ஆண், 15,469 பெண், 3 மூன்றாம் பாலினத்தவர்) வாக்களிக்க உள்ளனர்.
  மக்களவைத் தேர்தலில் 18 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தலில் 8 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
  தட்டாஞ்சாவடியில் 2 அறைகள்...: மக்களவைத் தேர்தலில் ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் 2 வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்படும். தட்டாஞ்சாவடி தொகுதியில் ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் 3 வாக்குப்பதிவு இயந்திரங்களுடன் மக்களவை, சட்டப்பேரவை இடைத்தேர்தலுக்காக 2 வாக்களிக்கும் அறைகள் அமைக்கப்படும். அனைத்து வாக்குச்சாவடிகளிலும் விவிபாட் இயந்திரங்கள் பயன்படுத்தப்படும்.  புதுவையில் 2,421 வாக்குப்பதிவு இயந்திரங்களும், 1,147 கட்டுப்பாட்டு இயந்திரங்களும், 1,209 விவி பாட் இயந்திரங்களும் பயன்படுத்தப்பட உள்ளன.
  970 வாக்குச்சாவடிகள்...: புதுவை மாநிலத்தில் 595 (புதுச்சேரி - 428, காரைக்கால் - 116, மாஹே - 21, ஏனாம் - 30) இடங்களில் 970 வாக்குச்சாவடிகள் (புதுச்சேரி - 738, காரைக்கால் -116, மாஹே - 164, ஏனாம் - 36) அமைக்கப்பட்டுள்ளன. 
  இதில் 222 (புதுச்சேரி - 171, காரைக்கால் - 29, மாஹே - 10, ஏனாம் - 12) வாக்குச்சாவடிகள் பதற்றமானவை எனவும், 25 (காரைக்கால் - 16, ஏனாம் - 9) வாக்குச்சாவடிகள் மிக பதற்றமானவை எனவும் கண்டறியப்பட்டுள்ளன. 
  பதற்றமான வாக்குச்சாவடிகளில் துணை ராணுவப்படையினரின் உதவியுடன் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இணையதள வசதியுடன் கூடிய கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. 
  வாக்காளர் உதவி மையம்...: அனைத்து வாக்குச்சாவடிகளிலும் அடிப்படை வசதிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மாற்றுத்திறனாளிகளின் வசதிக்காக 
  சக்கர நாற்காலிகள், சாய்வுதளம் அமைக்கப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகளுக்காக போக்குவரத்து வசதிகளும், அவர்களுக்கு உதவ தன்னார்வலர்களும் அமர்த்தப்பட்டுள்ளனர். பார்வையற்ற வாக்காளர்களின் வசதிக்காக பிரெய்லி வாக்குச்சீட்டு தேர்தல் நடத்தும் அலுவலர் வசம் வைக்கப்பட்டிருக்கும். 
  வாக்காளர்களின் வசதிக்காக ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் வாக்காளர் உதவி மையம் அமைக்கப்பட்டுள்ளது. அனைத்து வாக்குச்சாவடி நிகழ்வுகளும் வலைதளம் மூலம் நேரடியாக கண்காணிக்கப்படும்.
  தேர்தல் பணியில் 4,433 ஊழியர்கள்...: தேர்தல் பணியில் 4,433 அலுவலர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மாஹே (30), ஏனாம் (40) பகுதிகளுக்கு மட்டும் 76 தலைமை வாக்குச்சாவடி அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். 82 நுண் பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். தேர்தல் சேவை பணிக்காக 1,002 மாணவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். 36 மருத்துவக் குழுக்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். 1,850 காவலர்கள், 10 கம்பெனி துணை ராணுவப் படையினர் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.
  வாக்குச்சாவடி பொருள்களை விநியோகிக்க 11 மையங்களும், வாக்குப்பதிவு இயந்திரங்களை பாதுகாக்க 13 பாதுகாப்பு மையங்களும் நிறுவப்பட்டுள்ளன.
  பொதுவிடுமுறை...: தேர்தல் நாளான 18-ஆம் தேதி ஊதியத்துடன் கூடிய பொதுவிடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள காவலர்கள் உள்பட 7,617 பேருக்கு தேர்தல் பணி சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. அண்டை மாநிலங்களில் தேர்தல் பணியில் உள்ள புதுவை மாநிலத்தைச் சேர்ந்தவர்கள், தட்டாஞ்சாவடி தொகுதியில் வசிக்கும் 1,050 அரசு ஊழியர்களிடமிருந்து தபால் வாக்கிற்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. மக்களவை தேர்தலுக்காக 249-ம், இடைத்தேர்தலுக்காக 6-ம் மின்னணு மாற்று தபால் வாக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
  புகைப்பட வாக்குச்சீட்டு...: புதுவையில் இதுவரை 9,42,096 வாக்காளர்களுக்கு (97 சதவீதம்) புகைப்பட வாக்குச்சீட்டு விநியோகிக்கப்பட்டுள்ளது. புகைப்பட வாக்குச்சீட்டு இல்லாத வாக்காளர்கள் 11 மாற்று அடையாள ஆவணங்களில் ஒன்றை காண்பித்து வாக்களிக்கலாம்.  
  3 நாள்களுக்கு மது விற்பனை தடை...: புதுச்சேரியில் 16-ஆம் தேதி முதல் 18-ஆம் தேதி இரவு வரையிலும், வாக்கு எண்ணிக்கை நாளான 23-ஆம் தேதியும் மது விற்பனைக்கு தடை செய்யப்பட்டுள்ளது.
  தேர்தல் நடத்தை 
  விதிமுறை...: தேர்தல் நடத்தை விதிமுறைகளின் படி, அரசு, தனியார் இடங்களில் எழுதப்பட்டிருந்த 25,000 சுவர் விளம்பரங்கள், பதாகைகள் அகற்றப்பட்டுள்ளன. 10 தேர்தல் நடத்தை விதிமீறல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 
  கலால் தொடர்பாக 94 வழக்குகள் பதியப்பட்டு, 68 பேர் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளனர். 8 கார்கள், 24 பைக்குகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. ஒரு மதுபானக் கடை, 2 சாராயக் கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. 
  இதுவரை ரூ. 3,44,18,245 ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டு, உரிய ஆவணங்களைக் காண்பித்த பிறகு ரூ. 3,13,88,895 திரும்ப அளிக்கப்பட்டுள்ளது. ரூ. 30,29,350 விசாரணையில் உள்ளது. ரூ. 9.21 லட்சம் மதிப்பிலான 5,098.1 மதுபானம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 
  ரூ. 27,88,616 மதிப்பிலான பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டு, உரிய விசாரணைக்குப் பிறகு ரூ. 4,62,160 மதிப்பிலான பொருள்கள் திருப்பியளிக்கப்பட்டுள்ளன. ரூ. 23,16,456 மதிப்பிலான பொருள்கள் விசாரணையில் உள்ளன. ரூ. 6.25 கோடி மதிப்பில் பறிமுதல் செய்யப்பட்ட விலையுயர்ந்த பொருள்கள், உரிய விசாரணைக்குப் பிறகு திரும்ப வழங்கப்பட்டுள்ளன.
  சி-விஜில் செயலியில் 97 புகார்கள் பெறப்பட்டு, 48-க்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 49 புகார்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.  1950 இல் 214 புகார்கள் பெறப்பட்டு, 205 க்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.    
  அச்சமின்றி வாக்களிக்கலாம்...:  வாக்குப்பதிவு நிறைவு பெறும் வரை பறக்கும் படை மற்றும் இதர குழுக்கள் தீவிர கண்காணிப்பில் ஈடுபடும். புதுவை மாநிலத்தில் தேர்தலுக்கு அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளன. 
  இதுவரை அமைதியான சூழலே நிலவுகிறது. வாக்குப்பதிவு தினத்திலும் இதே அமைதியை கடைப்பிடிக்க தேர்தல் துறை அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது. வாக்காளர்கள் அச்சமின்றி தங்களது வாக்குகளை பதிவு செய்யலாம். வாக்குச்சாவடிக்குள் வாக்காளர்கள் செல்லிடப்பேசிகளை கொண்டு செல்ல அனுமதியில்லை என்றார் கந்தவேலு.
  மாவட்ட தேர்தல் அதிகாரி டி. அருண் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
   

   

  பெண்களால் நிர்வகிக்கப்படும் வாக்குச்சாவடிகள்
  புதுவை மாநிலத்தில் சுல்தான்பேட்டை காயிதேமில்லத் அரசு மேல்நிலைப் பள்ளி, லாஸ்பேட்டை குளுனி மேல்நிலைப் பள்ளி, முத்தியால்பேட்டை வாசவி சர்வதேச பள்ளி, லாஸ்பேட்டை டிஐஇடி, நைனார்மண்டபம் அன்னை தெரசா மாதிரி மேல்நிலைப் பள்ளி, சத்யா நகர் ஆதித்யா வித்யாஸ்ரம், காரைக்கால் ஒளவையார் பெண்கள் அரசுக் கல்லூரி ஆகிய 7 வாக்குச்சாவடிகள் முழுக்க பெண் அதிகாரிகளால் நிர்வகிக்கப்படும். இங்கு ஆண், பெண் இருபாலரும் வாக்களிக்கலாம். 
  வாக்களிக்கத் தேவையான ஆவணங்கள்
  வாக்காளர் தங்களது வாக்குச்சீட்டை மட்டும் அடையாளமாக பயன்படுத்த முடியாது. அதனுடன், கடவுச்சீட்டு, ஓட்டுநர் உரிமம், புகைப்படத்துடன் கூடிய பணியாளர் அடையாள அட்டை, புகைப்படத்துடன் கூடிய வங்கி கணக்கு புத்தகம், பான் கார்டு, ஸ்மார்ட் கார்டு, ஊரக வேலைத் திட்ட அட்டை, மருத்துவக் காப்பீடு அட்டை, புகைப்படத்துடன் கூடிய ஓய்வூதிய அடையாள அட்டை, எம்பி, எம்எல்ஏ, எம்எல்சி ஆகியோருக்கு வழங்கப்பட்ட அடையாள அட்டை, ஆதார் அட்டை ஆகிய 11 அடையாள ஆவணங்களைப் பயன்படுத்தி வாக்களிக்கலாம். வெளிநாடு வாழ் இந்தியர்கள் தங்களது அசல் கடவுச்சீட்டை அடையாள ஆவணமாக பயன்படுத்தலாம்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai