கூத்தாண்டவர் கோயில் விழா: அழகிப் போட்டி ரத்தால் பொதுமக்கள் ஏமாற்றம்
By DIN | Published On : 18th April 2019 09:09 AM | Last Updated : 18th April 2019 09:09 AM | அ+அ அ- |

புதுவை மாநிலம், பிள்ளையார்குப்பத்தில் கூத்தாண்டவர் கோயில் திருவிழாவில் வழக்கமாக நடைபெறும் திருநங்கைகளுக்கான அழகிப்போட்டி ரத்து செய்யப்பட்டதால் பொதுமக்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
புதுவை மாநிலம், வில்லியனூர் அருகே பிள்ளையார்க்குப்பம் பகுதியில் உள்ள கூத்தாண்டவர் கோயிலில் சித்திரை திருவிழா கடந்த ஏப்.4-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 9-ஆம் தேதி மீனாட்சி அம்மன் ஆராதனை, சாகை வார்த்தல், ஊரணி பொங்கல் படைத்தல் நிகழ்ச்சி நடைபெற்றது.
13 நாள்கள் நடைபெறும் இந்த விழாவின் முக்கிய நிகழ்வான கூத்தாண்டவர் சுவாமிக்கு திருக்கல்யாணம் மற்றும் திருநங்கைகள் தாலிகட்டும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை (ஏப்.16) நடைபெற்றது. இதில் ஏராளமான திருநங்கைகள் மற்றும் வேண்டுதல் உள்ள பொதுமக்கள் கலந்து கொண்டு தாலி கட்டிக்கொண்டனர்.
இதனைத் தொடர்ந்து புதன்கிழமை தேரோட்டம் நடைபெற்றது. மே 18-ஆம் தேதி படுகளம் எழுப்புதல் நிகழச்சி நடைபெறவுள்ளது.
அழகிப்போட்டி ரத்து: இதனிடையே, ஆண்டுதோறும் திருவிழாவின் போது திருநங்கைககளுக்கான அழகிப் போட்டி நடைபெறும். இதில் புதுவை, தமிழகம், மேற்குவங்கம் உள்பட நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து திருநங்கைகள் வந்து கலந்து கொள்வர்.
அவர்களுக்கு அழகுப்போட்டி, பொது அறிவு உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்படும்.
இந்த நிலையில், மக்களவைத் தேர்தல் காரணமாக திருநங்கைகளுக்கான அழகிப் போட்டிக்கு அனுமதி மறுக்கப்பட்டு, போட்டியும் ரத்து செய்யப்பட்டது.
இதனால், வெளி மாநிலங்களில் இருந்து திருநங்கைகள் யாரும் வராததால் கோயில் திருவிழா பொலிவிழந்து காணப்பட்டது.
மேலும், இத்திருவிழாவைக் காண மிகுந்த எதிர்பார்ப்புடன் வெளியூர்களில் இருந்து வந்த பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.