மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

புதுச்சேரிக்கு உள்பட்ட வாக்குச்சாவடி மையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் சட்டப்பேரவைத் தொகுதி வாரியாக புதன்கிழமை அனுப்பி வைக்கப்பட்டன.

புதுச்சேரிக்கு உள்பட்ட வாக்குச்சாவடி மையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் சட்டப்பேரவைத் தொகுதி வாரியாக புதன்கிழமை அனுப்பி வைக்கப்பட்டன.
புதுச்சேரி பிராந்தியத்தில் உள்ள 738 வாக்குச்சாவடிகள் வாக்களிக்க தயார் நிலையில் உள்ளன.
  புதுச்சேரி மக்களவைத் தொகுதி மற்றும் தட்டாஞ்சாவடி சட்டப்பேரவைத் தொகுதிக்கான இடைத்தேர்தல் வியாழக்கிழமை நடைபெறுகிறது.  
இதில் பயன்படுத்தப்பட உள்ள வாக்குப்பதிவு இயந்திரங்கள், மை உள்ளிட்டவை லாஸ்பேட்டை பெண்கள் பாலிடெக்னிக் கல்லூரியில் உள்ள கட்டுப்பாட்டு அறைக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு எடுத்துச் செல்லப்பட்டன. 
 அங்கிருந்து புதன்கிழமை அதிகாலை 5.30 மணியளவில் மண்ணாடிப்பட்டு, திருபுவனை, ஊசுடு ஆகிய தொகுதிகளில் பயன்படுத்தப்பட 
உள்ள வாக்குப்பதிவு இயந்திரங்கள் வில்லியனூர் விவேகானந்தா அரசு மேல்நிலைப் பள்ளிக்கும்,  மங்கலம், வில்லியனூர், உழவர்கரை தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இயந்திரங்கள் வில்லியனூர் கண்ணகி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளிக்கும், கதிர்காமம், இந்திரா நகர், தட்டாஞ்சாவடி தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இயந்திரங்கள் கதிர்காமம் இந்திரா காந்தி அரசு மேல்நிலைப் பள்ளிக்கும், காமராஜ் நகர், முத்தியால்பேட்டை, ராஜ்பவன் தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இயந்திரங்கள் முத்தியால்பேட்டை பாரதிதாசன் மகளிர் கல்லூரிக்கும், லாஸ்பேட்டை, காலாப்பட்டு தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இயந்திரங்கள் லாஸ்பேட்டை வள்ளலார் அரசு மேல்நிலைப் பள்ளிக்கும், உப்பளம், உருளையன்பேட்டை முதலியார்பேட்டை தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இயந்திரங்கள் உப்பளம் ராஜீவ் காந்தி விளையாட்டு பள்ளிக்கும், நெல்லித்தோப்பு, அரியாங்குப்பம், மணவெளி தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இயந்திரங்கள் முதலியார்பேட்டை அன்னை சிவகாமி மேல்நிலைப் பள்ளிக்கும், ஏம்பலம், நெட்டப்பாக்கம், பாகூர்  தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இயந்திரங்கள் கரிக்கலாம்பாக்கம் அரசு மேல்நிலைப் பள்ளிக்கும் கொண்டு செல்லப்பட்டன.
 பின்னர், பிற்பகல் 12.30 மணியளவில் அங்கு வரவழைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடி அதிகாரிகளிடம் வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஒப்படைக்கப்பட்டு அந்தந்த வாக்குச்சாவடிகளுக்கு கொண்டு செல்லப்பட்டன. மாலை 5 முதல் 6 மணிக்குள் அனைவரும் வாக்குச்சாவடிகளுக்குள் சென்றுவிட வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டது. 
 அதன்படி, வாக்குச்சாவடி அதிகாரிகள் வாக்குப்பதிவுப் இயந்திரங்களை கொண்டு சென்று தயார்படுத்தினர். வியாழக்கிழமை காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கவுள்ள நிலையில் இயந்திரங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com