பாமக ஜனநாயக அரசியலுக்கு திரும்ப வேண்டும்: துரை.ரவிக்குமார்

பாமக வன்முறைப் பாதையிலிருந்து விலகி ஜனநாயக அரசியலுக்குத் திரும்ப வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலர் துரை. ரவிக்குமார் வேண்டுகோள் விடுத்தார்.


பாமக வன்முறைப் பாதையிலிருந்து விலகி ஜனநாயக அரசியலுக்குத் திரும்ப வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலர் துரை. ரவிக்குமார் வேண்டுகோள் விடுத்தார்.
சிதம்பரம் மக்களவைத் தொகுதிக்கு உள்பட்ட அரியலூர் மாவட்டம், பொன்பரப்பி கிராமத்தில் தலித் மக்கள் குடியிருப்புகளில் புகுந்து உடைமைகளையும், குடியிருப்புகளையும் சேதப்படுத்தி தாக்குதலில் ஈடுபட்டவர்களை வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய வலியுறுத்தி, புதுச்சேரி சுதேசி மில் அருகே விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் புதன்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்துக்கு, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் முதன்மைச் செயலர் தேவ. பொழிலன் தலைமை வகித்தார். பொதுச் செயலர் துரை. ரவிக்குமார் கண்டன உரையாற்றினார்.
காங்கிரஸ் மாநில துணைத் தலைவர் நீலகங்காதரன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் விசுவநாதன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முருகன், மதிமுக மாநில பொறுப்பாளர் கபிரியேல் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தில், பொன்பரப்பி வன்முறையைக் கண்டித்தும், மத்திய பாஜக அரசு மற்றும் பாமகவைக் கண்டித்தும் முழக்கங்களை எழுப்பினர்.
தொடர்ந்து விசிக பொதுச் செயலர் துரை.ரவிக்குமார் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
பொன்பரப்பியில் பாமக கட்டவிழ்த்துவிட்ட வன்முறை காரணமாக 200-க்கும் மேற்பட்ட தலித் மக்கள் வாக்களிக்க முடியவில்லை. மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின்படி, வாக்குச்சாவடி அருகே வன்முறையோ, கலவரமோ நடந்தால் அங்கு வாக்குப்பதிவு ஒத்திவைக்கப்பட்டு, மறு வாக்குப்பதிவு நடத்தப்பட வேண்டும்.
ஆனால், தேர்தல் நடத்தும் அதிகாரி வாக்குச்சாவடிக்கு உள்ளே வன்முறை எதுவும் நடக்கவில்லை என்று தவறாக அறிக்கை அளித்து, மறு வாக்குப்பதிவு தேவையில்லை எனத் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக தலைமைத் தேர்தல் அதிகாரியிடம் முறையிட்டுள்ளோம். மறு வாக்குப்பதிவு நடத்துவது தொடர்பாகப் பரிசீலிப்பதாக அவர் கூறினார்.
பாமக கட்டவிழ்த்துவிட்டுள்ள வன்முறையை கூட்டணிக் கட்சியான அதிமுகவே கண்டித்துள்ளது. இந்த வன்முறையால் எந்தளவுக்கு அந்தக் கூட்டணி பாதிக்கப்பட்டுள்ளது என்பதற்கு இது ஓர் உதாரணம்.
பாமகவின் வன்முறை காரணமாகத்தான் இன்றைக்கு 10 வாக்குச்சாவடிகளில் மறு வாக்குப்பதிவுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
தொடர்ந்து, 20 ஆண்டுகளாக பாமக ஒவ்வொரு தேர்தலிலும் வன்முறையைத் தூண்டிவிட்டு, தலித் மக்களை வாக்களிக்க விடாமல் தடுப்பது,  கள்ள வாக்குகளைப் பதிவு செய்வது, வாக்குச்சாவடிகளைக் கைப்பற்றுவது உள்ளிட்ட வழிமுறைகளைப் பின்பற்றி வருகின்றனர். இது ஜனநாயக அரசியலுக்கு உகந்தது அல்ல. அவர்கள் இந்தப் பாதையில் இருந்து விலகி ஜனநாயக அரசியலுக்குத் திரும்ப வேண்டும்; அதுதான் நல்லது என்றார் அவர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com