ஜிப்மர் எதிரே சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றம்

ஜிப்மர் மருத்துவமனை எதிரே போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் ஆக்கிரமித்து வைக்கப்பட்டிருந்த

ஜிப்மர் மருத்துவமனை எதிரே போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் ஆக்கிரமித்து வைக்கப்பட்டிருந்த கடைகள் போலீஸ் பாதுகாப்புடன் வெள்ளிக்கிழமை அகற்றப்பட்டன.
புதுச்சேரி, கோரிமேடு பகுதியில் மத்திய அரசின் ஜிப்மர் மருத்துவமனை இயங்கி வருகிறது. இங்கு, புதுச்சேரி மட்டுமன்றி, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஏராளமானோர் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர். 
இதனிடையே, ஜிப்மர் மருத்துவமனை எதிரே சாலையை ஆக்கிரமித்து கடைகள், உணவகங்கள் வைக்கப்பட்டுள்ளன. இதனால், பேருந்து நிறுத்தத்தில் பொதுமக்கள், நோயாளிகள் நிற்க முடியாமல் சாலையின் நடுவே காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. அதுமட்டுமன்றி, இஎஸ்ஐ மருத்துவமனை, அரசு அதிகாரிகள் குடியிருப்புகளுக்கு செல்லும் சாலையும் ஆக்கிரமிப்பிக்கப்பட்டிருந்தது. இதனால், அந்தப் பகுதியில் போக்குவரத்து இடையூறு ஏற்பட்டதுடன், போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டு வந்தது. 
அதிகாரிகள் ஆய்வு...: இந்த நிலையில் ஜிப்மர் எதிரே சாலை ஆக்கிரப்புகளை முழுமையாக அகற்றி, அந்தப் பகுதியில் விரிவாக்கப் பணிகளை மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டது. இது தொடர்பாக புதுவை அரசின் வளர்ச்சி ஆணையர் அன்பரசு வியாழக்கிழமை அந்த இடத்தைப் பார்வையிட்டு, புதுச்சேரி மாவட்ட ஆட்சியர் டி. அருண், முதுநிலை எஸ்.பி. ராகுல் அல்வால் ஆகியோருடன் ஆலோசனை மேற்கொண்டார். இதில், ஆக்கிரமிப்புகளை உடனே அகற்றுவதுடன், சாலை விரிவாக்கப் பணிகளை மேற்கொள்ளவதென முடிவெடுக்கப்பட்டது. 
ஆக்கிரமிப்புகள் அகற்றம்...: அதன்படி, வெள்ளிக்கிழமை உழவர்கரை நகராட்சி ஆணையர் கந்தசாமி, வட்டாட்சியர் சுரேஷ்ராஜன், பொதுப் பணித் துறை உதவி பொறியாளர்கள் ஏழுமலை, சந்திரசேகர், இளநிலை பொறியாளர்கள், காவல் ஆய்வாளர்கள் முன்னிலையில், பொதுப் பணித் துறை தேசிய நெடுஞ்சாலைப் பிரிவு, மின் துறை, நகராட்சி ஊழியர்கள் இணைந்து ஜிப்மர் எதிரே உள்ள ஆக்கிரமிப்புகளை இடித்து  அகற்றினர்.
மூன்று பொக்லைன் இயந்திரங்கள், 4 லாரிகள், டிராக்டர்கள் உள்ளிட்டவை கொண்டு வரப்பட்டு 25-க்கும் மேற்பட்ட கடைகள் இடித்து அகற்றப்பட்டன. இந்தப் பணியை அங்கிருந்த வியாபாரிகளும், பெண்களும் நிறுத்தக் கோரி அதிகாரிகளிடம் முறையிட்டனர். இருப்பினும், அதிகாரிகள் ஆக்கிரமிக்கப்பட்ட கடைகளை அகற்றினர். ஆக்கிரமிப்பு அகற்றத்தின் போது, அசம்பாவிதங்கள் ஏதும் ஏற்படாமல் இருக்க 50-க்கும் மேற்பட்ட போலீஸார் குவிக்கப்பட்டனர். 
இதனிடையே, இதுபற்றி தகவலறிந்து அங்கு வந்த ஜெயபால் எம்.எல்.ஏ.விடம் வியாபாரிகள் முறையிட்டனர். அவர்களின் கோரிக்கையைக் கேட்டறிந்த எம்.எல்.ஏ. அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.  ஒரு புறம் பேச்சுவார்த்தை நடைபெற்ற நிலையில், மற்றொரு புறம் தொடர்ந்து ஆக்கிரமிப்பு அகற்றும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர். இதனால், அங்கு பரபரப்பான சூழல் ஏற்பட்டது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com