ஆங்கிலம் தெரியாததால் பிறர் உதவியை நாட வேண்டியுள்ளது: அமைச்சர் கந்தசாமி வருத்தம்

"ஆங்கிலம் தெரியாததால் பிறர் உதவியை நாட வேண்டிய சூழல் உள்ளது' என்று புதுவை சமூக நலத் துறை அமைச்சர் மு.கந்தசாமி வருத்தத்துடன் தெரிவித்தார்.

"ஆங்கிலம் தெரியாததால் பிறர் உதவியை நாட வேண்டிய சூழல் உள்ளது' என்று புதுவை சமூக நலத் துறை அமைச்சர் மு.கந்தசாமி வருத்தத்துடன் தெரிவித்தார்.
புதுவை மாநிலம், பாகூர் பாரதி 
அரசுப் பள்ளியின் முன்னாள் மாணவர்கள் சங்கம் சார்பில் முன்னாள் மாணவர்களின் முதல் சந்திப்பு நிகழ்ச்சி, பள்ளி வளாகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.  நிகழ்ச்சியில்,  அமைச்சர் 
கந்தசாமி சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு விழா மலரை வெளியிட்டு பேசியதாவது:
நான் இந்தப் பள்ளிக்கு கிருமாம்பாக்கத்தில் இருந்து மிதிவண்டியில் வந்துதான் படித்தேன். என்னுடன் எங்கள் ஊரில் இருந்து யாரும் படிக்க வராததால் பாதியிலேயே படிப்பை நிறுத்திவிட்டேன்.  இப்போது நான் அமைச்சராக இருந்தாலும் ஆங்கில மொழியை படிக்காததால் கட்சியின் மேலிட தலைவர்களிடமும்,  அதிகாரிகளிடமும் என்னால் பேச முடியவில்லை. இதனால், மொழி பெயர்ப்புக்கு பிறரின் உதவியை நாட வேண்டியுள்ளது. இந்த நிலை வரும் காலத்தில் எந்த மாணவர்களுக்கும் ஏற்படக் கூடாது. 
தற்போது, படித்த இளைஞர்கள் பலர் மது போதைக்கு அடிமையாகி நேரத்தை வீணடிக்கின்றனர். சிலர் உழைக்காமல் இரு சக்கர வாகனம்,  செல்லிடப்பேசி வாங்க வேண்டும் என்பதற்காக திருட்டில் ஈடுபடுகின்றனர். இது மிகவும் வேதனையாக உள்ளது.
பள்ளியில் முன்னாள் மாணவர்களை அழைத்து நிகழ்ச்சிகள் நடத்த வேண்டும். அவர்களது அனுபவங்களை பகிர்ந்து 
கொள்ளச் செய்து  தற்போதுள்ள மாணவர்களை ஒழுக்கமுடையவர்களாக மாற்ற வேண்டும் என்றார் அமைச்சர் கந்தசாமி.
இந்த நிகழ்ச்சிக்கு, பள்ளி முதல்வர் கரிமாதியாகி தலைமை வகித்தார்.  விஜயவேணி எம்.எல்.ஏ.,  மாணவர் சங்கச் செயலர் ராமலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  விரிவுரையாளர் மேகலா பேசின் வரவேற்றார். சங்க இணைச் செயலர் வெற்றிவேல் நோக்கவுரையாற்றினார்.
புதுவை சுற்றுச்சூழல் மற்றும் மாசு கட்டுப்பாட்டுத் துறை பொறியாளர் ரமேஷ்,  காவல்துறை அதிகாரி சபிபுல்லா,  முன்னாள் மாணவர்கள் சிவபெருமாள்,  சந்திரன்,  பாலமுருகன்,  சசிகலா,  தமிழரசி உள்பட பலர் தங்கள் பள்ளிப்பருவ நிகழ்வுகளை நினைவு கூர்ந்தனர்.
நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவருக்கும் தென்னை மரக்கன்றுகள் வழங்கப்பட்டன. கலைநிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. 
பள்ளித் தலைமை ஆசிரியர் பழனிசாமி நன்றி தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com