நாளை சுதந்திர தினம்: பாதுகாப்பு வளையத்தில் புதுச்சேரி

சுதந்திர தின விழாவையொட்டி புதுச்சேரியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.

சுதந்திர தின விழாவையொட்டி புதுச்சேரியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.
நாட்டின் 73-ஆவது சுதந்திர தினம் வியாழக்கிழமை (ஆக.15) கோலாகலமாகக் கொண்டாடப்படவுள்ளது. 
புதுச்சேரி உப்பளம் இந்திராகாந்தி விளையாட்டு மைதானத்தில் நடைபெறும் விழாவில் முதல்வர் வே. நாராயணசாமி தேசியக் கொடியேற்றி, காவல் துறை அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டு, பல்வேறு துறைகளில் சாதனை புரிந்தவர்களுக்கு விருது வழங்கி கெளரவிக்கவுள்ளார்.
பாதுகாப்பு தீவிரம்: காஷ்மீர் சம்பவம் காரணமாக, நிகழாண்டு மத்திய உள்துறை உத்தரவுக்கிணங்க மாநிலங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. புதுவையிலும் சுதந்திர தினத்தையொட்டி உச்சக்கட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. விழா நடைபெறும் புதுச்சேரி உப்பளம் இந்திராகாந்தி விளையாட்டு மைதானம் முழுமையாக காவல் துறை கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டுள்ளது. அங்கு திங்கள்கிழமை மாலை முதல் 24 மணி நேர கண்காணிப்பில் போலீஸார் ஈடுபட்டுள்ளனர். 
வெடிகுண்டு நிபுணர்கள் அவ்வப்போது சோதனை நடத்தி வருகின்றனர்.
ரயில், பேருந்து நிலையங்களில் சோதனை: புதுச்சேரியில் உள்ள பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்களில் போலீஸார் தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு, பயணிகளின் 
உடைமைகளை மோப்ப நாய்கள் உதவியுடன் பரிசோதித்து வருகின்றனர். சாதாரண உடையிலும் காவலர்கள் ரோந்துப் பணிகளில் ஈடுபட்டு, சந்தேக நபர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கடலோரக் காவல் படையும் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டுள்ளது. வெளிமாநில வாகனங்கள் மாநில எல்லைகளில் தீவிர சோதனைக்குப் பிறகே புதுச்சேரிக்குள் அனுமதிக்கப்படுகின்றன. உணவு விடுதிகள், ஹோட்டல்களை போலீஸார் ஆய்வு செய்து, சந்தேக நபர்கள் குறித்து உடனடியாக தகவல் அளிக்க வேண்டும் என உரிமையாளர்களிடம் அறிவுறுத்தியுள்ளனர். 
மேலும், முக்கிய சந்திப்புகளில் சிசிடிவி கேமராக்களும் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன. பாதுகாப்புப் பணிகளில் 500-க்கும் மேற்பட்ட போலீஸார் ஈடுபட்டுள்ளதாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.
இறுதிக் கட்ட ஒத்திகை: இதனிடையே, உப்பளம் மைதானத்தில் செவ்வாய்க்கிழமை சுதந்திர தின இறுதிக் கட்ட ஒத்திகை நிகழ்ச்சி டிஐஜி ஈஸ்வர்சிங் தலைமையில் நடைபெற்றது. 
இதில் முதுநிலை எஸ்பி ராகுல் அல்வால், எஸ்பிக்கள் மாறன், செல்வன், பாலகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
மின்விளக்கு அலங்காரம்: சுதந்திர தின விழாவை முன்னிட்டு புதுச்சேரி ஆளுநர் மாளிகை, சட்டப்பேரவை வளாகம், தலைமைச் செயலகம், கடற்கரை காந்தி சிலை, கார்கில் போர் வீரர்கள் நினைவிடம் உள்ளிட்ட முக்கிய நினைவுச் சின்னங்கள் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளன.
பேரவை வளாகத்தை டிஜிபி ஆய்வு: இதனிடையே, புதுவை சட்டப்பேரவை வளாகத்தை டிஜிபி பாலாஜி ஸ்ரீவத்ஸவா செவ்வாய்க்கிழமை பிற்பகலில் திடீரென ஆய்வு செய்தார். 
சுதந்திர தினத்தில் அங்கு கொடியேற்றம் நடைபெறும் இடம், அணிவகுப்பு மரியாதை ஏற்றுக் கொள்ளும் இடம் ஆகிய பகுதிகளை அவர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும், அங்கு பாதுகாப்புப் பணியிலிருந்த காவலர்களுக்கு அறிவுரைகளையும் வழங்கினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com