நெகிழிப் பொருள்கள் விற்பனை: அதிகாரிகள் ஆய்வு
By DIN | Published On : 22nd August 2019 09:25 AM | Last Updated : 22nd August 2019 09:25 AM | அ+அ அ- |

புதுச்சேரியில் உள்ள கடைகளில் நெகிழிப் பொருள்கள் விற்பனை குறித்து அதிகாரிகள் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டனர்.
தமிழகத்தில் கடந்தாண்டு நெகிழிப் பொருள்களுக்குத் தடை விதிக்கப்பட்டது. எனினும், புதுச்சேரியில் தடை விதிக்கப்படவில்லை. மக்களவைத் தேர்தல் முடிவடைந்த நிலையில், அமைச்சர் கந்தசாமியின் உத்தரவுக்கிணங்க, ஆகஸ்ட் 1-ஆம் தேதி முதல் நெகிழிப் பொருள்களுக்கான தடை புதுவையில் அமலுக்கு வந்தது.
இருப்பினும், பெரும்பாலான கடைகளில் தடை செய்யப்பட்ட நெகிழிப் பொருள்கள் விற்பனை செய்யப்படுவதாக அதிகாரிகளுக்கு புகார்கள் சென்றன.
இந்த நிலையில், சுற்றுச்சூழல் துறை இயக்குநர் ஸ்மிதா, உள்ளாட்சித் துறை இயக்குநர் மலர்க்கண்ணன் தலைமையிலான குழுவினர், புதுச்சேரி நகரப் பகுதிகளில் உள்ள கடைகளில் தடை செய்யப்பட்ட நெகிழிப் பொருள்கள் விற்பனை குறித்து புதன்கிழமை ஆய்வில் ஈடுபட்டனர்.
ரங்கப்பிள்ளை வீதி, காமராஜர் சாலை, பாரதி வீதி, வைசியாள் வீதி, நேரு வீதி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கடைகளில் ஆய்வு மேற்கொண்ட அதிகாரிகள், அங்கு விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த தடை செய்த நெகிழி குவளைகள், பைகள் உள்ளிட்டவற்றை பார்வையிட்டு, இனிமேல் நெகிழிப் பொருள்களை விற்றால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கடை உரிமையாளர்களிடம் எச்சரிக்கை விடுத்தனர். மேலும், அவர்களிடம் அபராதம் வசூலிக்கவும் நடவடிக்கை எடுத்தனர்.