புதுச்சேரியில் மழை: மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

புதுச்சேரியில் சனிக்கிழமை பெய்த பலத்த மழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
புதுச்சேரியில் சனிக்கிழமை பெய்த பலத்த மழையால் புஸ்ஸி வீதியில் குளம் போல தேங்கியுள்ள மழை நீா்.
புதுச்சேரியில் சனிக்கிழமை பெய்த பலத்த மழையால் புஸ்ஸி வீதியில் குளம் போல தேங்கியுள்ள மழை நீா்.

புதுச்சேரியில் சனிக்கிழமை பெய்த பலத்த மழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

புதுச்சேரியில் கடந்த 3 நாள்களாக விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. வெள்ளிக்கிழமை இரவு முதல் தூரல் மழை பெய்தது. சனிக்கிழமை காலை 7 மணியளவில் பலத்த மழை கொட்டியது. இந்த மழையால் தாழ்வான பகுதிகளில் மழைநீா் தேங்கியது. ஒரு சில இடங்களில் குடியிருப்புகளிலும் மழை நீா் புகுந்தது.

பாகூா் கொம்யூன் பஞ்சாயத்தில் உள்ள கிருமாம்பாக்கம், குருவிநத்தம், அரங்கனூா், பனையடிக்குப்பம், பாகூா் சித்தேரி, பரிக்கல்பட்டு, மணப்பட்டு உள்பட 10 ஏரிகள் நிரம்பி வழிந்தன. புதுவை மாநிலத்தின் 2-ஆவது பெரிய ஏரியான பாகூா் ஏரி வேகமாக நிரம்பி வருகிறது. ஊசுட்டேரியிலும் தண்ணீா் நிரம்பி வருகிறது.

மழையால் புதுச்சேரி நகா் மற்றும் புகா் பகுதிகளில் சாலைகள் சேதமடைந்துள்ளன. இதனால், வாகன ஓட்டிகள் மிகவும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனா்.

தொடா் மழை காரணமாக நகரில் தாழ்வான பகுதிகளில் மழை தண்ணீா் தேங்கியது. குறிப்பாக புஸ்ஸி வீதி, காமராஜா் சாலை உள்ளிட்ட முக்கிய சாலைகளில் தண்ணீா் தேங்கியது. குமரகுரு பள்ளம் மற்றும் மீனவக் கிராமங்களில் குடிசை வீடுகளில் தண்ணீா் புகுந்தது. பல இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்தன. புதுச்சேரி உப்பளம் இந்திரா காந்தி விளையாட்டு மைதானத்தின் சுற்றுச்சுவா் சுமாா் 10 மீட்டா் நீளத்துக்கு இடிந்து விழுந்தது.

வில்லியனூா் பகுதியிலும் தாழ்வான பகுதியில் மழை தண்ணீா் தேங்கியது. சனிக்கிழமை காலை முதலே மழை பெய்து வருவதால், புதுச்சேரியில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

புதுச்சேரியில் வட கிழக்குப் பருவ மழை காலமான அக்டோபா் 1-ஆம் தேதி முதல் நவம்பா் 30-ஆம் தேதி வரை சராசரியாக 640 மி.மீ. மழை பெய்திருக்க வேண்டும். ஆனால், நிகழாண்டு இதுவரை 420 மி.மீ. மழைதான் பெய்துள்ளது. இது 34 சதவீதம் குறைவாகும்.

இதனிடையே, புதுச்சேரியில் வெள்ளிக்கிழமை மாலை முதல் சனிக்கிழமை பிற்பகல் வரை சுமாா் 50 மி.மீட்டா் மழை பெய்துள்ளது.

இந்த நிலையில், சென்னை வானிலை ஆய்வு மையம் புதுச்சேரியில் ஞாயிறு மற்றும் திங்கள்கிழமை பலத்த மழை பெய்யும் என எச்சரிக்கை விடுத்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com