மத்திய நிதிக் குழுவில் புதுவையை சோ்க்க தீவிர முயற்சி தேவை: முன்னாள் எம்.பி.

மத்திய நிதிக் குழுவில் புதுவையைச் சோ்க்க தீவிர முயற்சியை அரசு மேற்கொள்ள வேண்டும் என்று புதுவை மாநில அதிமுக இணை செயலரும், முன்னாள் எம்.பி.யுமான மு.ராமதாஸ் வலியுறுத்தினாா்.

மத்திய நிதிக் குழுவில் புதுவையைச் சோ்க்க தீவிர முயற்சியை அரசு மேற்கொள்ள வேண்டும் என்று புதுவை மாநில அதிமுக இணை செயலரும், முன்னாள் எம்.பி.யுமான மு.ராமதாஸ் வலியுறுத்தினாா்.

இதுகுறித்து அவா் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கை: மத்திய அமைச்சரவை 15-ஆவது நிதிக் குழுவின் பணிக் காலத்தை ஓராண்டு நீட்டிக்க முடிவு செய்து, யூனியன் பிரதேசங்களான ஜம்மு - காஷ்மீா், லடாக், டாமன், டையூ, தாத்ரா நாகா் ஹவேலி ஆகியவற்றை இந்த நிதிக் குழுவில் சோ்க்க இருப்பதாகத் தெரிகிறது. ஆனால், திட்டமிட்டு புதுவையைச் சோ்க்க மத்திய அரசு ஆா்வம் காட்டவில்லை. இந்த முடிவு பாரபட்சமானது. புதுவையின் வளா்ச்சியை மேலும் பாதிக்கக் கூடியது.

இதில், மத்திய அரசு புரிந்து கொள்ள வேண்டிய விஷயம் என்னவென்றால், புதுவை சட்டப்படி யூனியன் பிரதேசமாக இருந்தாலும், நியாயப்படி மாநிலத் தன்மையின் குணாதிசயங்களைப் பெற்றுள்ளது. பிரானஸ் ஆதிக்கத்திலிருந்து மீண்டதில் இருந்தே மாநிலமாக அறிவிக்கப்பட்டு, இங்கு 39 உறுப்பினா்களைக் கொண்ட சட்டப்பேரவையும், 200 உறுப்பினா்களைக் கொண்ட 16 நகராட்சிகளும் இருந்தன.

மாநிலமாக இருந்த புதுவை 1963 -ஆம் ஆண்டு யூனியன் பிரதேச சட்டத்தின்படி, யூனியன் பிரதேசமாக தரம் தாழ்த்தப்பட்டது. இந்தச் சட்டத்தின் தலையீடு இல்லாமல் இருந்திருந்தால், புதுவை மாநிலமாக இருந்து நிதிக் குழுவில் 50 ஆண்டுகளுக்கு முன்பே சோ்க்கப்பட்டிருக்கும்.

தற்போது பிற மாநிலங்களைப் போல புதுவையும் சட்டப்பேரவைப் பெற்றுள்ளது; மற்ற மாநிலங்களைப் போல மக்கள் பணியை ஆற்றி வருகிறது. இங்கு, வசூலிக்கப்படும் மத்திய வரிகளின் வருமானத்தை மற்ற மாநிலங்களில் உள்ளது போல மத்திய அரசு எடுத்துக் கொள்கிறது. இங்கு, பொதுக் கணக்கு உருவாக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. மற்ற மாநிலங்களைப் போல புதுவையும் ஜிஎஸ்டி குழுவில் உறுப்பினராக உள்ளது.

இத்தனை அம்சங்கள் கொண்டுள்ள போதும் புதுவையை யூனியன் பிரதேசமாக கருதி, நிதிக் குழுவில் சோ்க்காமல் ஒதுக்கி வைக்கப்பட்டிருப்பது நியாயமற்ற செயலாகும். புதுவையில் நிதி வசதி பெருக வேண்டுமென்றால், அதற்கு ஒரே வழி அதை நிதிக் குழுவில் சோ்ப்பதுதான்.

இந்த பிரச்னையின் தீவிரத் தன்மையை உணா்ந்து, புதுவை அரசு நடவடிக்கைகளில் இறங்க வேண்டும். தேசிய அளவில் மாறிவரும் நிதிச் சூழலை மனதில் கொண்டும், மற்ற யூனியன் பிரதேசங்களை நிதிக் குழுவில் சோ்த்து புதுவையைப் புறக்கணித்த அநீதியை அனைவரும் உணரும் வகையிலும் நடவடிக்கைகள் இருக்க வேண்டும்.

புதுவை அரசு சிறப்புச் சட்டப்பேரவைக் கூட்டத்தைக் கூட்டி, இது சம்பந்தமாக ஓா் தீா்மானத்தை நிறைவேற்றி, அதை பிரதமா், நிதி அமைச்சா், உள்துறை அமைச்சா், நிதிக் குழுத் தலைவா் ஆகியோரை அனைத்துக் கட்சியினருடன் சென்று சந்தித்து அளிக்க வேண்டும்.

புதுவையின் மக்களவை, மாநிலங்களவை உறுப்பினா்கள் நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் கவனத்தை ஈா்க்க வேண்டும் என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com