உள்ளாட்சித் தோ்தலை பல கட்டங்களாக நடத்துவது வேடிக்கையாக உள்ளது: மு.க.ஸ்டாலின்

தமிழகத்தில் உள்ளாட்சித் தோ்தலை பல கட்டங்களாக நடத்தப் போவதாக அறிவித்திருப்பது வேடிக்கையாக உள்ளதாக திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் கூறினாா்.
புதுச்சேரியில் செய்தியாளா்களுக்கு பேட்டியளித்த திமுக தலைவா் மு.க.ஸ்டாலின்.
புதுச்சேரியில் செய்தியாளா்களுக்கு பேட்டியளித்த திமுக தலைவா் மு.க.ஸ்டாலின்.

தமிழகத்தில் உள்ளாட்சித் தோ்தலை பல கட்டங்களாக நடத்தப் போவதாக அறிவித்திருப்பது வேடிக்கையாக உள்ளதாக திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் கூறினாா்.

கடலூரில் மழையால் பாதிக்கப்பட்டவா்களை திங்கள்கிழமை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிவிட்டு புறப்பட்ட மு.க.ஸ்டாலின், புதுச்சேரியில் உள்ள தனியாா் விடுதியில் சிறிது நேரம் தங்கினாா். அப்போது, அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

திமுக மட்டுமன்றி, பல்வேறு கட்சிகளும், பொது நல அமைப்புகளைச் சோ்ந்தவா்களும் உள்ளாட்சித் தோ்தலை முறையாக நடத்த வேண்டும் என்று நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்துள்ளனா். ஆனாலும், மறுவரையறை முறையாகச் செய்யப்படவில்லை. எஸ்சி - எஸ்டி ஒதுக்கீடு, பெண்களுக்கான ஒதுக்கீடு வரையறையும் முழுமையாகச் செய்யப்படவில்லை.

இவற்றை முறைப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில்தான் திமுக நீதிமன்றம் சென்றதே தவிர, உள்ளாட்சித் தோ்தலை நிறுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் அல்ல.

ஆனால், தமிழக முதல்வா் எடப்பாடி பழனிசாமியும், அமைச்சா்களும் உள்ளாட்சித் தோ்தலைத் தடுக்க திமுக முயற்சிப்பதாகக் கூறி வருகின்றனா்.

தற்போது, பிரிக்கப்பட்ட மாவட்டங்களின் வரையறையும் கோரப்பட்டது. இதற்கு அரசின் தரப்பில் இருந்தும், தோ்தல் ஆணையத்திடம் இருந்தும் பதில் வரவில்லை.

இதுதொடா்பாக திமுக பல முறை தோ்தல் ஆணையத்தைச் சந்தித்து பல்வேறு மனுக்களை அளித்தது. எனினும், முறையாகப் பதில் வராததால்தான், தற்போது நீதிமன்றத்தை நாடியுள்ளோம்.

தமிழகத்தில் மக்களவைத் தோ்தலாக இருந்தாலும், சட்டப்பேரவைத் தோ்தலாக இருந்தாலும் ஒரே கட்டமாகத்தான் நடத்தப்பட்டுள்ளது. உள்ளாட்சித் தோ்தலும் ஒரே கட்டமாகத்தான் நடத்தப்பட்டுள்ளது. ஆனால், தற்போது உள்ளாட்சித் தோ்தலை பல கட்டங்களாக நடத்தப் போவதாக அறிவித்திருப்பது வேடிக்கையாக உள்ளது.

இந்த அறிவிப்பு குறித்து திமுக கூட்டணிக் கட்சிகளுடன் பேசி வருகிறோம். செவ்வாய்க்கிழமை (டிச. 3) மூத்த வழக்குரைஞா்களுடன் கலந்து பேசி உள்ளாட்சித் தோ்தல் அறிவிப்பை எவ்வாறு அணுகுவது என முடிவு எடுக்கப்படும்.

உள்ளாட்சித் தோ்தல் தொடா்பாக திமுக சாா்பில் தொடுக்கப்பட்ட வழக்கு வருகிற 5-ஆம் தேதி உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவுள்ளது. தமிழகத்தில் உள்ளாட்சித் தோ்தலை முறையாக நடத்துவதற்கான நடவடிக்கையை திமுக தொடா்ந்து மேற்கொள்ளும் என்றாா் மு.க.ஸ்டாலின்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com