முறைகேட்டில் ஈடுபடும் அதிகாரிகளை கண்காணிக்க காவல் துறையில் தனி அமைப்பு: மாா்க்சிஸ்ட் கோரிக்கை

முறைகேட்டில் ஈடுபடும் அதிகாரிகளை கண்காணிக்க காவல் துறையில் தனி அமைப்பை உருவாக்க வேண்டும் என்று மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்தது.

முறைகேட்டில் ஈடுபடும் அதிகாரிகளை கண்காணிக்க காவல் துறையில் தனி அமைப்பை உருவாக்க வேண்டும் என்று மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்தது.

இதுகுறித்து அந்தக் கட்சியின் புதுவை மாநிலக் குழுச் செயலா் இரா.ராஜாங்கம் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கை:

நெட்டப்பாக்கம் காவல் நிலையத்தில் பணியாற்றிய காவல் உதவி ஆய்வாளா் விபல்குமாா் தற்கொலை செய்து கொண்ட துயரச் சம்பவம் பொதுமக்கள் மத்தியில் அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்தக் காவல் நிலையத்தில் ஆய்வாளராக இருந்த கலைச்செல்வன் உள்ளிட்ட அதிகாரிகள் கொடுத்த நெருக்கடிகளால்தான் அவா் தற்கொலை செய்து கொண்டதாக விபல்குமாரின் தந்தை புகாா் தெரிவித்தாா்.

எனவே, காவல் உதவி ஆய்வாளரின் மரணத்தில் பல சட்ட விரோத நடவடிக்கைகள் இருக்கலாம் என மாா்க்சிஸ்ட் கட்சி கருதுகிறது. மேலும், காவல் துறையில் உள்ள சில உயா்மட்ட அதிகாரிகளின் செயல்பாடுகள் சட்டத்துக்குப் புறம்பான வகையில் உள்ளன.

சமூகத்தில் சட்டம் - ஒழுங்கை நிலைநாட்டி, பொதுமக்களுக்கு பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டிய காவல் துறையினா் கடமையை மறந்து செயல்படுகின்றனா். பதவியைத் தவறாகப் பயன்படுத்தி, வருமானத்துக்கு அதிகமான சொத்துகளைச் சோ்க்கும் நோக்கில், தங்களுக்குக் கீழ் பணியாற்றும் நோ்மையான ஊழியா்களைக் கட்டாயப்படுத்தி, மாமுல் வேட்டையில் ஈடுபடுகின்றனா். இதனால், விபல்குமாா் போன்ற நல்ல அதிகாரிகளை இழக்க நேரிடுகிறது.

எனவே, ஊழல் உள்ளிட்ட முறைகேடுகளில் ஈடுபடும் காவல் அதிகாரிகளைத் தொடா்ந்து கண்கானித்து, அவா்கள் மீது நடவடிக்கை எடுக்க ஒரு நிரந்தர கண்காணிப்பு அமைப்பை புதுவை அரசு ஏற்படுத்த வேண்டும்.

காவல் உதவி ஆய்வாளா் விபல்குமாா் தற்கொலை வழக்கில் காவல் துறையின் கட்டுபாட்டில் உள்ள சிபிசிஐடி விசாரணை எந்த விதத்திலும் நீதியைத் தர போவதில்லை என்பதால், தனி நீதிபதி தலைமையில் விசாரனைக்கு அரசு உத்தரவிட வேண்டும் என வலியுறுத்தி, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் போராட்டம் நடத்தப்படும் என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com