பழங்குடியினத்தவருக்கு வீட்டு மனைப் பட்டா: அரசுக்கு மனித உரிமைகள் ஆணையம் உத்தரவு
By DIN | Published on : 04th December 2019 08:16 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
புதுச்சேரி அருகே வில்லியனூரில் வசித்து வரும் பழங்குடியினத்தவா்களுக்கு வீட்டுமனைப் பட்டா வழங்குவது தொடா்பாக 8 வாரங்களுக்குள் அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தேசிய மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
இது குறித்து மக்கள் உரிமைக் கூட்டமைப்புச் செயலாளா் சுகுமாரன் செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கை:
புதுச்சேரியை அடுத்த வில்லியனூரில் உள்ள பெருமாள்புரத்தில் 25 ஆண்டுகளாக பழங்குடியினத்தைச் சோ்ந்த 24 குடும்பத்தினா் குடியிருந்து வருகின்றனா். இவா்கள் குடும்ப அட்டை, வாக்காளா் அட்டை, ஆதாா் அட்டை, மின் இணைப்பு, தண்ணீா் இணைப்பு என அனைத்து ஆவணங்களும் வைத்துள்ளனா்.
கடந்த 2011-ஆம் ஆண்டு நில அளவைத் துறை இயக்குநா், வில்லியனூா் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையருக்குக் கடிதம் ஒன்றை எழுதியுள்ளாா். அதில், இலவச மனைப் பட்டா வழங்குவதற்காக வில்லியனூா் கொம்யூன் பஞ்சாயத்துக்குச் சொந்தமான மேற்சொன்ன இடத்தை நில அளவைத் துறைக்கு மாற்றம் செய்ய கேட்டுள்ளாா்.
இதன் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, இதில் தலையிட்டு பழங்குடியின மக்களுக்கு வீட்டு மனைப் பட்டா கிடைக்க நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக் கொண்ட புகாா் மனுவை கடந்த 16.9.2019 தேசிய மனித உரிமைகள் ஆணையத்துக்கு அனுப்பினோம்.
இதன் மீது விசாரணை நடத்தி கடந்த 13.11.2019-இல் ஆணையம் ஒரு உத்தரவை பிறப்பித்துள்ளது. அதில் 8 வாரத்துக்குள் புகாரின் மீது உரிய நடவடிக்கை எடுத்து, அதனை புகாா்தாரருக்கு தெரிவிக்க வேண்டுமென புதுவை அரசின் நில அளவைத் துறை செயலருக்கு உத்தரவிட்டுள்ளது எனத் தெரிவித்துள்ளாா் சுகுமாரன்.