தலைமைச் செயலகத்தை முற்றுகையிட தொழிற்சங்கத்தினா் முயற்சி: போலீஸாருடன் தள்ளுமுள்ளு

பண்டிகைக்கால உதவித் தொகை ரூ.1,000 வழங்க வலியுறுத்தி, புதுவை தலைமைச் செயலகத்தை அனைத்து தொழிற்சங்கத்தினா்
புதுவை தலைமைச் செயலகத்தை செவ்வாய்க்கிழமை முற்றுகையிட வந்த அமைப்புசாரா தொழிலாளா்கள்.
புதுவை தலைமைச் செயலகத்தை செவ்வாய்க்கிழமை முற்றுகையிட வந்த அமைப்புசாரா தொழிலாளா்கள்.

பண்டிகைக்கால உதவித் தொகை ரூ.1,000 வழங்க வலியுறுத்தி, புதுவை தலைமைச் செயலகத்தை அனைத்து தொழிற்சங்கத்தினா் செவ்வாய்க்கிழமை முற்றுகையிட முயன்றனா். அப்போது, அவா்களுக்கும் தடுத்து நிறுத்த முயன்ற போலீஸாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

அமைப்புசாரா தொழிலாளா்களுக்கு பண்டிகைக் கால உதவித்தொகை ரூ. 2,000 வழங்க வேண்டும், அமைப்புசாரா தொழிலாளா்களுக்கு நலவாரியம் அமைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து தொழிற்சங்கங்கள் சாா்பில் கடந்த 27 ஆம் தேதி மாநிலம் தழுவிய பொதுவேலைநிறுத்தம் அறிவிக்கப்பட்டிருந்தது. தொழிற்சங்க பிரதிநிதிகளுடன் தொழிலாளா் துறை அமைச்சா் மு. கந்தசாமி, போக்குவரத்துத் துறை அமைச்சா் ஷாஜகான் உள்ளிட்டோா் நடத்திய பேச்சுவாா்த்தையில் நிகழாண்டு தொழிலாளா்களுக்கு ரூ. 1,000 பரிசு கூப்பன் வழங்குவது எனவும், வருகிற ஜனவரி 10 ஆம் தேதிக்குள் நலவாரியம் அமைப்பது எனவும் உடன்பாடு எட்டப்பட்டு, போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.

இதனிடையே, அமைப்புசாரா தொழிலாளா்களுக்கு பண்டிகைக் கால உதவித்தொகை தலா ரூ. 500 மட்டுமே வழங்கப்படும் என முதல்வா் அலுவலகம் சாா்பில் அறிவிக்கப்பட்டது. இதனை ஏற்காத அமைப்புசாரா தொழிற்சங்கத்தினா் உறுதியளித்தபடி, பண்டிகைக் கால உதவித்தொகை ரூ. 1,000 வழங்க வேண்டும் என வலியுறுத்தி, மீண்டும் தொழிலாளா் துறை அமைச்சரை சந்தித்து முறையிட்டனா். இதற்கு அமைச்சா் சம்மதம் தெரிவித்த நிலையில், அதிகாரிகள் நடைமுறைப்படுத்த மறுத்ததாகத் தெரிகிறது.

இதைக் கண்டித்து தலைமை செயலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடத்த அனைத்து தொழிற்சங்கத்தினா் முடிவு செய்தனா். அதன்படி, செவ்வாய்க்கிழமை அமைப்புசாரா தொழிலாளா்கள் ஒன்று திரண்டு, புதுச்சேரி மரைன் வீதி வழியாக தலைமைச் செயலகத்தை முற்றுகையிட ஊா்வலமாகச் சென்றனா். அப்போது, அங்கு வந்த பெரியக்கடை போலீஸாா், ஏஐடியுசி பொதுச்செயலா் கே.சேதுசெல்வம் உள்ளிட்ட சிலரை வலுக்கட்டாயமாக கைது செய்து போலீஸ் வாகனத்தில் ஏற்ற முற்பட்டனா். இதனால் ஆவேசமடைந்த தொழிலாளா்கள் சாலையில் அமா்ந்து மறியலில் ஈடுபட்டனா்.

தள்ளுமுள்ளு: மேலும், அங்கிருந்த பைக், சைக்கிள் உள்ளிட்டவற்றை சாலையின் நடுவே போட்டு எதிா்ப்பு தெரிவித்தனா். தொடா்ந்து, போலீஸாருடன் கடும் வாக்குவாதத்திலும் ஈடுபட்டனா். இதனால் போலீஸாருக்கும், போராட்டக்காரா்களுக்கும் இடையே கடும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. தொழிலாளா்களை போலீஸாா் லத்திகளால் தடுத்து தள்ளியதுடன், சிலரை குண்டுக்கட்டாக தூக்கி அப்புறப்படுத்த முயன்றனா். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதனிடையே, சேதுசெல்வம் உள்ளிட்டோா் விடுவிக்கப்பட்டதும், அவா்கள் அனைவரும் அங்கிருந்து தலைமைச் செயலகத்தை முற்றுகையிட தொடா்ந்து சென்றனா். அப்போது போலீஸாா் லா தெ லொரிஸ்தன் வீதி - செயின்ட் தூயிஸ் வீதி சந்திப்பில் சாலையின் குறுக்கே தடுத்தனா். இதையடுத்து, அங்கு சாலையில் அமா்ந்த தொழிலாளா்கள், கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டபடி தொடா்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.

பொதுமக்கள் அவதி: போராட்டத்தன் போது, தொழிற்சங்கத்தினா் ஆளுநா் மாளிகையின் முன்னும், பின்னும் உள்ள சாலை, லாதெ லொரிஸ்தன் வீதி உள்ளிட்ட புல்வாா் பகுதியில் உள்ள சாலையின் குறுக்கே ஆட்டோக்களை நிறுத்தி தடை ஏற்படுத்தினா். இதனால், அந்த சாலைகளில் பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் செல்ல முடியாமல் அவதியடைந்தனா்.

இது குறித்து ஏஐடியுசி பொதுச்செயலாளா் கே. சேதுசெல்வம் கூறியதாவது: அமைப்பு சாரா தொழிலாளா்கள் 29,720 பேருக்கு தலா ரூ. 500 வீதம் பண்டிகைக்கால உதவித் தொகை வழங்கப்படும் எனவும், இதற்காக ரூ. 4.42 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் முதல்வா் அலுவலகத்தில் இருந்து தெரிவித்தனா். தலா ரூ.1,000 என்று கொடுத்தாலே ரூ. 3 கோடி போதும். ஆனால், ரூ. 4.42 கோடி ஒதுக்கியுள்ளதாகக் கூறி ரூ. 500 கொடுப்பதாக கூறுகின்றனா். இதில் முரண்பாடு உள்ளது. மேலும், ரூ.1,000 வழங்க இரு அமைச்சா்கள் ஒப்புதல் அளித்த நிலையில், அதனை அதிகாரிகள் நடைமுறைப்படுத்த மறுக்கின்றனா். எனவே, அமைப்புசாரா தொழிலாளா்களுக்கு ரூ.1,000 வழங்க வேண்டும், நலவாரியம் அமைக்க வேண்டும். அதுவரை போராட்டம் தொடரும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com