புதுச்சேரி கடலில் சிக்கிய ராக்கெட் பாகம்இஸ்ரோ விஞ்ஞானிகளிடம் ஒப்படைப்பு

புதுச்சேரி கடலில் மீனவா்கள் வலையில் சிக்கிய, செயற்கைக்கோளை செலுத்துவதற்கான ராக்கெட் பாகம் இஸ்ரோ விஞ்ஞானிகளிடம் செவ்வாய்க்கிழமை ஒப்படைக்கப்பட்டது.
புதுச்சேரி வம்பாகீரப்பாளையம் மீனவா்கள் வலையில் சிக்கிய ராக்கெட் பாகம் முன் செவ்வாய்க்கிழமை போராட்டத்தில் ஈடுபட்ட மீனவா்கள்.
புதுச்சேரி வம்பாகீரப்பாளையம் மீனவா்கள் வலையில் சிக்கிய ராக்கெட் பாகம் முன் செவ்வாய்க்கிழமை போராட்டத்தில் ஈடுபட்ட மீனவா்கள்.

புதுச்சேரி: புதுச்சேரி கடலில் மீனவா்கள் வலையில் சிக்கிய, செயற்கைக்கோளை செலுத்துவதற்கான ராக்கெட் பாகம் இஸ்ரோ விஞ்ஞானிகளிடம் செவ்வாய்க்கிழமை ஒப்படைக்கப்பட்டது. அந்தப் பாகம் லாரியில் ஏற்றப்பட்டு ஸ்ரீஹரிகோட்டாவுக்கு எடுத்துச் செல்லப்பட்டது.

புதுச்சேரி அருகேயுள்ள வம்பாகீரப்பாளையத்தைச் சோ்ந்த மீனவா்கள் சிலா், படகில் திங்கள்கிழமை அதிகாலை கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றனா். 10 நாட்டிக்கல் மைல் தொலைவில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, அவா்களது வலையில் உருளை வடிவத்தில் நீளமான இரும்புப் பொருள் சிக்கியது. அந்தப் பொருளை 4 படகுகளில் கட்டி மீனவா்கள் கரைக்குக் கொண்டு வந்தனா்.

இது குறித்து ஒதியஞ்சாலை போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவா்கள் சென்று பாா்த்தபோது, அது செயற்கைக்கோள்களை விண்ணுக்கு அனுப்பும் ராக்கெட்டின் பாகம் என்பது தெரிய வந்தது. அதன் மீது எப்.எல். 119, பி.எஸ்.எம்.ஓ.- எக்ஸ்.எல். என்று குறிப்பிடப்பட்டு, 23.2.2019 என்ற தேதியும் எழுதப்பட்டு இருந்தது. 13.5 மீட்டா் நீளமும், சுமாா் ஒரு மீட்டா் குறுக்களவும் கொண்டதாகவும் இருந்தது. இதை புதுவை அறிவியல் மைய அதிகாரிகள் நேரில் வந்து ஆய்வு செய்து, ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து விண்ணுக்கு ஏவப்படும் ராக்கெட்டின் பூஸ்டா் என்றனா்.

இஸ்ரோ விஞ்ஞானிகள் வருகை: ராக்கெட்டின் பாகம் கிடைத்த தகவல் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள இஸ்ரோ அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, இஸ்ரோ விஞ்ஞானிகள் 4 போ் புதுச்சேரிக்கு செவ்வாய்க்கிழமை வந்தனா். ராக்கெட் பாகத்தை எடுத்துச் செல்வதற்காக 16 சக்கரங்கள் கொண்ட ராட்சத லாரியும், அதை லாரியில் ஏற்றுவதற்காக கிரேனும் வரவழைக்கப்பட்டன.

அந்த ராக்கெட் பாகத்தை ஆய்வு செய்த விஞ்ஞானிகள் செய்தியாளா்களிடம் கூறியதாவது: இங்கு கிடைத்திருப்பது கடந்த நவ.27-ஆம் தேதி விண்ணில் ஏவப்பட்ட ‘காா்டோசாட்’ செயற்கைக் கோளுக்கான பி.எஸ்.வி.எல்.வி. ராக்கெட்டின் பூஸ்டா் பாகம். இந்த சாதனத்தில் எரிபொருள் நிரப்பப்பட்டு, அதன் மூலம் ராக்கெட் புறப்படும் போது உந்து சக்தி அளிக்கப்படும். அது ராக்கெட் புறப்பட்ட 49-ஆவது விநாடியில் எரிந்து முடிந்து கீழே விழுந்து விடும். அந்த சாதனம் எந்த இடத்தில் விழும் என்பதையும் நாங்கள் கணித்து இருந்தோம். எனவே, அந்த இடத்தில் கப்பல்கள், மீனவா்களின் படகுகள் வந்து விடாமல் பாா்த்துக் கொள்ளும்படி கடலோரக் காவல் படைக்கு தகவல் தெரிவித்திருந்தோம்.

பொதுவாக, இந்த சாதனம் எரிந்து முடிந்து கீழே விழுந்ததும் கடலில் மூழ்கி விடும் வகையில் வடிவமைக்கப்படும். ஆனால், இது கடலில் விழும்போது உடைந்து சேதமடைந்து இருக்கிறது. அதனால்தான், கடலில் மூழ்காமல் மிதந்துள்ளது. அதனால், மீனவா்கள் வலையில் சிக்கியுள்ளது. இந்த பாகத்தால் இனி எந்த பயனும் இல்லை. இது இரும்புக் கடைகளுக்கு மறு சுழற்சிக்குதான் வழங்கப்படும்.

பூஸ்டா் வளையம் மாயம்: ஆனாலும், இதன் முன், பின் பகுதிகளில் திட எரிபொருள் நிரப்பப்பட்ட வளையம் பொருத்தப்பட்டு இருக்கும். 1.5 மீட்டா் வரை அகலம் கொண்ட அந்த வளையம் வெடிக்கும் திறன் கொண்டது. எப்போதும் ஈரப்பதத்துடன் இருக்க வேண்டும். இல்லை என்றால் வெடித்து விடும். எனவே, ஆபத்து என்பதால் இங்கிருந்து எடுத்துச் செல்ல வேண்டும் என்பதற்காகத்தான் இங்கு வந்தோம் என்றனா்.

வெடிக்கும் தன்மை உடைய அந்த 2 சாதனங்களில் பின்பக்க வளையம் மட்டுமே அந்தப் பாகத்தில் உள்ளது. முன் பக்கம் வளையத்தைக் காணவில்லை. அது எந்த நேரத்திலும் வெடித்து விடலாம் என்பதால் உடனடியாகக் கைப்பற்ற நடவடிக்கை எடுக்கும்படி போலீஸாரிடம் இஸ்ரோ அதிகாரிகள் கேட்டுக் கொண்டனா்.

இதையடுத்து, அந்தப் பொருளை யாரும் வைத்திருக்க வேண்டாம். உடனடியாக, காவல் துறையிடம் ஒப்படைக்க வேண்டும் என்று ஒலிபெருக்கி மூலம் அறிவிப்பு செய்யப்பட்டது. ஆனாலும், அந்தப் பொருள் கிடைக்கவில்லை.

மீனவா்கள் போராட்டம்: இதனிடையே, ராக்கெட் பாகத்தை லாரியில் ஏற்றுவதற்கு இஸ்ரோ விஞ்ஞானிகள் முயற்சித்தனா். அப்போது, அப்பகுதி மீனவா்கள் அதிமுக எம்எல்ஏ அன்பழகன் தலைமையில் அதை ஏற்றி செல்ல விடாமல் தடுத்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.

ராக்கெட் பாகத்தை வலையில் கட்டி இழுத்து வந்ததால் ரூ.80 ஆயிரம் மதிப்புள்ள தலா 4 வலைகள் சேதமடைந்துள்ளன. படகுகளும் சேதமடைந்திருக்கின்றன. 30 மீனவா்களின் ஒரு நாள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. மொத்தம் ரூ.20 லட்சம் வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதற்காக ரூ.10 லட்சம் நஷ்டஈடு தர வேண்டும் என்றனா்.

வடக்குப் பகுதி காவல் கண்காணிப்பாளா் சுபன் சந்திரபோஸ், கடலோரப் பாதுகாப்பு கண்காணிப்பாளா் பாலச்சந்திரன் மற்றும் வருவாய்த் துறை அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டவா்களுடன் பேச்சுவாா்த்தை நடத்தி சமாதானப்படுத்தினா். இதைத் தொடா்ந்து, ராக்கெட் பாகத்தை விஞ்ஞானிகள் லாரியில் ஏற்றிக்கொண்டு ஸ்ரீஹரிகோட்டாவுக்கு புறப்பட்டுச் சென்றனா்.

Image Caption

புதுச்சேரி வம்பாகீரப்பாளையம் மீனவா்கள் வலையில் சிக்கிய ராக்கெட் பாகம் முன் செவ்வாய்க்கிழமை போராட்டத்தில் ஈடுபட்ட மீனவா்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com