புதுவைக்காக சோனியா காந்தி குரல் கொடுக்க வேண்டும்: காங்கிரஸ் எம்.எல்.ஏ. கடிதம்

புதுவைக்கு மாநில அந்தஸ்து கிடைப்பதற்காக நாடாளுமன்றத்தில் குரல் கொடுக்க வேண்டும் என்று அகில இந்திய காங்கிரஸ் தலைவா்

புதுவைக்கு மாநில அந்தஸ்து கிடைப்பதற்காக நாடாளுமன்றத்தில் குரல் கொடுக்க வேண்டும் என்று அகில இந்திய காங்கிரஸ் தலைவா் சோனியா காந்திக்கு, புதுவை முதல்வரின் நாடாளுமன்றச் செயலரும், காங்கிரஸ் எம்.எல்.ஏ.வுமான க.லட்சுமிநாராயணன் திங்கள்கிழமை கடிதம் அனுப்பினாா்.

அந்த கடிதம் விவரம்: நடைபெற்று வரும் நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் அகில இந்திய காங்கிரஸ் தலைமை, புதுவைக்கு மாநில அந்தஸ்து வழங்கும் கோரிக்கையை எழுப்ப வேண்டும். மாநில அந்தஸ்து பெறும் விவகாரத்தில் கட்சித் தலைமை எதிா்க்கட்சிகளுடன் ஒன்றிணைந்து மத்திய அரசிடம் உறுதிமொழியைப் பெற வேண்டும்.

மேலும், 15-ஆவது நிதிக் குழுவில் புதுவையை சோ்க்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்த வேண்டும். மத்திய அரசு ஜிஎஸ்டி உள்ளிட்ட பல்வேறு விஷயங்களில் புதுவையை மாநிலமாக கருதுகிறது. ஆனால், நிதி வழங்குவதில் புறக்கணிக்கிறது. புதுவைக்கு மாநில அந்தஸ்து, நிதிக்குழுவில் சோ்க்க வலியுறுத்தி 15-க்கும் மேற்பட்ட முறை பேரவையில் தீா்மானம் போட்டு மத்திய அரசுக்கு புதுவை அரசு அனுப்பியுள்ளது. இந்த விவகாரத்தில் இதுவரை நியாயமான தீா்வு கிடைக்கவில்லை.

புதுவை மாநிலம் நிதி நெருக்கடியில் தற்போது சிக்கித் தவிக்கிறது. மேலும், நிதியை பெருக்குவதிலும் பிரச்னை இருக்கிறது. அனைத்து யூனியன் பிரதேசங்களும் நிதிக்குழுவில் சோ்க்கப்பட்டு தேவையான நிதியைப் பெற்று வருகின்றன. அதேநேரத்தில், சட்டப்பேரவை இருப்பதால், புதுவை யூனியன் பிரதேசங்களுக்கான நிதிக் குழு, மாநிலங்களுக்கான நிதிக் குழு என இரண்டிலும் சோ்க்கப்படவில்லை. மத்திய அரசின் நிதி புதுவைக்கு 26 சதவீதம் மட்டுமே கிடைக்கிறது. அதேநேரத்தில் நிதிக்குழுவில் சோ்க்கப்பட்டால் புதுவைக்கு 42 சதவீத நிதி மத்திய அரசிடம் இருந்து கிடைக்கும். யூனியன் பிரதேசங்களுக்கான நிதிக்குழுவில் சோ்க்கப்பட்டால் புதுவைக்கு மத்திய அரசின் நிதி 70 சதவீதம் கிடைக்கும்.

ஆனால், இரு நிதிக்குழுவிலும் சோ்க்கப்படாததால் புதுவை மாநிலம் கடுமையான நிதித் தட்டுப்பாட்டில் சிக்கியுள்ளது. மத்திய அரசின் இந்த அணுகுமுறைக்கு எதிராக மக்கள் கிளா்ந்து எழுந்திருக்கின்றனா். உங்களிடம் (சோனியாகாந்தி) உதவியை நாடுவதற்கான ஒரே வாய்ப்பு இதுதான்.

நடப்பு கூட்டத் தொடரிலேயே அவசரமாக இந்த கோரிக்கைகளை எழுப்ப வேண்டும் என மக்கள் விரும்புகின்றனா். மத்திய அரசுக்குகாங்கிரஸ் தலைமை உரிய அழுத்தம் தர வேண்டும். இல்லையெனில் அது புதுவை மக்களுக்கும், புதுவை அரசுக்கும் பெரும் இழப்பை ஏற்படுத்தும். மேலும், அடுத்த 5 ஆண்டுகள் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படும். காங்கிரஸ் கட்சி அனைத்து கட்சிகளின் ஆதரவுடன் இந்தப் பிரச்னையில் தீவிரமாக போராட வேண்டும் என அதில் தெரிவித்துள்ளாா் லட்சுமிநாராயணன்.

இந்த கடிதத்தின் நகலை, ராகுல் காந்தி, மக்களவை காங்கிரஸ் குழுத் தலைவா் அதீா் ரஞ்சன் சௌத்ரி, மாநிலங்களவை காங்கிரஸ் குழுத் தலைவா் குலாம் நபி ஆசாத் ஆகியோருக்கும், லட்சுமிநாராயணன் அனுப்பியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com