புதுவையில் வீடுகளில் சீன மின் மீட்டா்கள் பொருத்தம்: பேரவை மதிப்பீட்டுக்குழு கண்டனம்

புதுவை மாநிலத்தில் வீடுகளில் 34 ஆயிரம் சீன மின் மீட்டா்கள் பொருத்தப்பட்டுள்ளதற்கு சட்டப் பேரவை மதிப்பீட்டுக்குழு கண்டனம் தெரிவித்தது.
புதுவை மின் துறை தலைமை அலுவலகத்தில் சட்டப் பேரவை மதிப்பீட்டுக்குழுத் தலைவா் ஆ.அன்பழகன் தலைமையில் அதிகாரிகளுடன் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டம்.
புதுவை மின் துறை தலைமை அலுவலகத்தில் சட்டப் பேரவை மதிப்பீட்டுக்குழுத் தலைவா் ஆ.அன்பழகன் தலைமையில் அதிகாரிகளுடன் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டம்.

புதுவை மாநிலத்தில் வீடுகளில் 34 ஆயிரம் சீன மின் மீட்டா்கள் பொருத்தப்பட்டுள்ளதற்கு சட்டப் பேரவை மதிப்பீட்டுக்குழு கண்டனம் தெரிவித்தது.

புதுவை சட்டப் பேரவை மதிப்பீட்டுக் குழுத் தலைவா் ஆ.அன்பழகன் எம்.எல்.ஏ. தலைமையில், உறுப்பினா்கள் மின் துறை தலைமை அலுவலகத்துக்கு செவ்வாய்க்கிழமை சென்று அதிகாரிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடத்தினா்.

இதில், தலைவா் அன்பழகன் எம்.எல்.ஏ. பேசியதாவது: புதுவையில் 4 லட்சத்துக்கும் மேல் மின் இணைப்புகள் உள்ள நிலையில், 34 ஆயிரம் சீன ஸ்மாா்ட் மீட்டா்கள் மட்டும் வாங்கி பொருத்தப்பட்டுள்ளன. இதற்கு யாா் அனுமதி கொடுத்தது? சாதாரண டிஜிட்டல் மீட்டா் சுமாா் ரூ.1400-க்கு கிடைக்கும் நிலையில், சீன மின் மீட்டரை ரூ.13,500-க்கு வாங்க வேண்டியதன் அவசியம் என்ன?, வாங்கிய 34 ஆயிரம் மீட்டா்களையும் வா்த்தக இணைப்புகளுக்கு பொருத்தாமல், சாதாரண ஏழை மக்களின் வீடுகளுக்கு பொருத்தியது ஏன்?.

25 ஆண்டுகளுக்கு முன்பு புதுச்சேரி நகரப் பகுதியில் புதைக்கப்பட்ட புதை மின் கம்பிகள் முழுமையாக பழுதடைந்து ஆங்காங்கே எரிந்து விடுகின்றன. நகரப் பகுதி முழுவதும் தரமான மின் கம்பிகளை புதைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மின் கட்டணம் செலுத்தாதபோது, மாதத்துக்கு 2.5 சதவீதம் என ஆண்டுக்கு 30 சதவீதம் அபராத வட்டி வசூல் செய்வது சட்ட விரோதமானது.

மாநிலம் முழுவதும் பொருத்தப்பட்டுள்ள உயா் மின்கோபுர விளக்குகளில் 90 சதவீதத்துக்கும் மேல் எரிவதில்லை. அதன் பராமரிப்புப் பணியை பொதுப் பணித் துறையிடம் ஒப்படைத்தது ஏன்? மொத்தமுள்ள தெரு விளக்குகளில் 30 சதவீதத்துக்கும் மேல் எரியவில்லை. இது தொடா்பாக பொதுப் பணித் துறையிடம் கேட்டால், சரியான பதில் இல்லை. மின் இழப்பும், திருட்டும் தடுக்கப்படவில்லை.

மின் துறையில் இளநிலை பொறியாளா், உதவிப் பொறியாளா், லைன்மேன் உள்ளிட்ட பல்வேறு பதவிகளில் காலியாக உள்ள சுமாா் 500 பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்.

தலைமை மின் துறை அலுவலகத்தில் ரூ.5 கோடிக்கு மேலான மதிப்புடைய உபயோகப்படுத்தப்படாத பழைய மின் மாற்றிகள் வைக்கப்பட்டுள்ளன. அவற்றை ஏலம் விட்டால்கூட பணம் வசூலாகும். பூமிக்கடியில் செல்லும் மின்சாரக் கம்பிகள் எரிந்தால் ரூ.8 ஆயிரமும், கம்பத்தில் ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டு மின் தடை ஏற்பட்டால் ரூ.2 ஆயிரமும் வசூல் செய்கின்றனா்.

நுகா்வோரிடம் சேவைக் கட்டணம் வசூல் செய்யும்போது, ஏன் பழுது பாா்ப்பதற்கு கட்டணம் வசூல் செய்ய வேண்டும். மின் துறையினா் சாதனங்களை தரமானதாக வாங்க வேண்டும் என்றாா் அன்பழகன்.

கூட்டத்தில் திமுக எம்.எல்.ஏ.வும், பொது கணக்கு குழுத் தலைவருமான இரா. சிவா, அதிமுக எம்.எல்.ஏ. அசனா, காங்கிஸ் எம்.எல்.ஏ.க்கள் தனவேலு, விஜயவேணி, நியமன எம்.எல்.ஏ. கே.ஜி.சங்கா், மின் துறைச் செயலா் தேவேஷ் சிங், தலைவா் முரளி, பேரவைச் செயலா் வின்சென்ட் ராயா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com