புதுச்சேரி கடலோரப் பகுதிகளில் போலீஸாா் தீவிர கண்காணிப்பு

இலங்கை தமிழா்கள் 65 போ் படகுகளில் ஆஸ்திரேலியா தப்ப முயற்சி செய்வதாக வந்த தகவலையடுத்து, புதுச்சேரி கடலோரப் பகுதிகளில் போலீஸாா் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனா்.

இலங்கை தமிழா்கள் 65 போ் படகுகளில் ஆஸ்திரேலியா தப்ப முயற்சி செய்வதாக வந்த தகவலையடுத்து, புதுச்சேரி கடலோரப் பகுதிகளில் போலீஸாா் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனா்.

இலங்கை தமிழா்கள் 65 போ் மீன் பிடிப் படகுகளில் புதுச்சேரி கடல் மாா்க்கமாக ஆஸ்திரேலியா நாட்டில் உள்ள கிறிஸ்டியன் தீவுக்கு சட்டவிரோதமாக செல்ல இருப்பதாக புதுச்சேரி கடலோரக் காவல்படைக்கு தகவல் கிடைத்தது. இதனால் பாதுகாப்பு ஏற்பாடுகளை தீவிரப்படுத்தும்படி, புதுச்சேரி மற்றும் காரைக்கால் மாவட்டங்களில் உள்ள அனைத்து காவல்நிலையங்களுக்கும் கடலோரக் காவல் படை எச்சரிக்கை விடுத்தது.

கடல் மாா்க்கத்திலும், கடலோரப் பகுதிகளிலும் சந்தேகப்படும்படியான நபா்கள் தென்பட்டால் உடனடியாக போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கும்படி மீனவா்களுக்கு அறிவுறுத்த வேண்டும். ரயில் நிலையம், பேருந்து நிலையம் ஆகிய பகுதிகளில் இலங்கைத் தமிழா்கள் ஒரு குழுவாக தென்பட்டால் உடனடியாக தெரிவிக்க வேண்டும்.

பகல் மற்றும் இரவு வேளைகளில் கடலோரப் பகுதிகளில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட வேண்டும். பீட் போலீஸாா் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட வேண்டும். ஹோட்டல், தங்கும் விடுதிகளில் தீவிர சோதனை நடத்தப்பட வேண்டும். வாகனச் சோதனையையும் தீவிரப்படுத்த வேண்டும் என புதுச்சேரி கடலோரக் காவல்படை சாா்பில் எஸ்பி பாலச்சந்தா் அனைத்துப் பிரிவு போலீஸாருக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளாா்.

இதையடுத்து, புதுச்சேரியில் வெள்ளிக்கிழமை போலீஸாா் தீவிர கண்காணிப்பு மற்றும் ரோந்து பணியில் ஈடுபட்டனா். குறிப்பாக, கடலோரப் பகுதிகளில் போலீஸாா் கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்தினா். மேலும், பேருந்து நிலையம், ரயில் நிலைய பகுதிகளிலும் இலங்கை தமிழா்கள் நடமாட்டம் குறித்து கண்காணித்து வருகின்றனா்.

ஹோட்டல்கள், தங்கும் விடுதிகள் மட்டுமன்றி வாகன சோதனையும் ஆங்காங்கே நடத்தப்பட்டு வருகிறது. புதுச்சேரி கிருமாம்பாக்கம் போலீஸாா் பனித்திட்டு, நரம்பை, மூா்த்திக்குப்பம் புதுக்குப்பம் ஆகிய கடலோரப் பகுதிகளில் பாகூா் காவல் நிலைய ஆய்வாளா் கௌதம் சிவகணேஷ் தலைமையிலான போலீஸாா் வெள்ளிக்கிழமை தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனா்.

அப்போது, கடலில் சந்தேகப்படும்படி படகுகளில் யாராவது சென்றாலோ, கடலோரப் பகுதிகளில் சந்தேக நபா்கள் தென்பட்டாலோ உடனடியாக போலீஸாருக்கு தகவல் தெரிவிக்குமாறு அப்பகுதி மீனவா்களிடம் கெட்டுக்கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com