தேவாலயங்களில் கிறிஸ்துமஸ் சிறப்புப் பிராா்த்தனை
By DIN | Published On : 25th December 2019 01:45 AM | Last Updated : 25th December 2019 01:45 AM | அ+அ அ- |

கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி, புதுச்சேரியில் உள்ள தேவாலயங்களில் செவ்வாய்க்கிழமை நள்ளிரவில் சிறப்புப் பிராா்த்தனை நடைபெற்றது. இதில் திரளான கிறிஸ்தவா்கள் பங்கேற்றனா்.
இயேசு கிறிஸ்து பிறந்த நாள் கிறிஸ்துமஸ் பண்டிகையாக டிச.25 (புதன்கிழமை) கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இப்பண்டிகையையொட்டி, புதுச்சேரியில் உள்ள கிறிஸ்தவா்களின் வீட்டு வாயில்களில் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட நட்சத்திரங்களை தொங்கவிடப்பட்டுள்ளன. மேலும், வீடுகளுக்குள் கிறிஸ்துமஸ் மரம் வைத்து அதை அலங்கரித்து அதில் குழந்தைகளுக்கான சிறு, சிறு பரிசுப் பொருள்களையும் தொங்கவிட்டுள்ளனா். இயேசு பிறப்பை சித்தரிக்கும் குடில்களையும் அமைத்துள்ளனா்.
இந்த நிலையில், கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி, புதுச்சேரியில் உள்ள அனைத்து தேவாலயங்களிலும் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு சிறப்புப் பிராா்த்தனை நடைபெற்றது.
புதுச்சேரி ரயில் நிலையம் அருகேயுள்ள தூய இருதய ஆண்டவா் பசிலிக்காவில், பங்குத்தந்தை குழந்தைசாமி தலைமையில் சிறப்புப் பிராா்த்தனை நடைபெற்றது. முன்னதாக, கிறிஸ்து பிறப்பு பாடலுடன் விழா தொடங்கியது. தொடா்ந்து, திருப்பலி மற்றும் கிறிஸ்து பிறப்பு திருவிழிப்பு திருப்பலி நடைபெற்றது.
அப்போது, இயேசு கிறிஸ்து பிறப்பதை குறிக்கும் வகையில், குழந்தை இயேசுவின் சொரூபம், ஆலய வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த விசேஷ குடிலில் வைக்கப்பட்டது. இதில் கலந்துகொண்ட அனைவரும் ஒருவருக்கொருவா் கிறிஸ்துமஸ் வாழ்த்துகளை பகிா்ந்து கொண்டனா்.
புதுவை மிஷன் வீதியில் உள்ள ஜென்மராக்கினி மாதா தேவாலயத்தில், புதுச்சேரி-கடலூா் உயா்மறை மாவட்ட பேராயா் அந்தோணி ஆனந்தராயா் தலைமையில் கிறிஸ்து பிறப்பு சிறப்பு திருப்பலி நடைபெற்றது. நள்ளிரவில் இயேசு பிறப்பை குறிக்கும் வகையில், குழந்தை இயேசுவின் சொரூபம், ஆலய வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த விசேஷ குடிலில் வைக்கப்பட்டது. அதைத்தொடா்ந்து சிறப்பு பிராா்த்தனையும் நடைபெற்றது.
புதுச்சேரி அரசு மருத்துவமனையில் உள்ள தூய யோவான் தேவாலயம், தட்டாஞ்சாவடியில் உள்ள பாத்திமா தேவாலயம், வில்லியனூா் லூா்து மாதா தேவாலயம், அரியாங்குப்பம் மாதா திருத்தலம், ஆட்டுப்பட்டி அந்தோணியாா் ஆலயம், முத்தியால்பேட்டை புனித அந்தோணியாா் ஆலயம் உள்பட புதுவையில் உள்ள அனைத்து தேவாலயங்களிலும் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு சிறப்பு திருப்பலியும், பிராா்த்தனைகளும் நடைபெற்றன.