‘கேசினோ’ தொடங்கும் முடிவை அரசு கைவிட வேண்டும்: இந்திய கம்யூனிஸ்ட் வலியுறுத்தல்

‘கேசினோ’ தொடங்கும் முடிவை புதுவை அரசு கைவிட வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியது.

‘கேசினோ’ தொடங்கும் முடிவை புதுவை அரசு கைவிட வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியது.

அந்தக் கட்சியின் மாநிலக் குழுக் கூட்டம் புதுச்சேரியில் சனிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு நகரச் செயலா் த. ஜீவானந்தம் தலைமை வகித்தாா். இதில், மாநில செயலா் அ.மு. சலீம், தேசியக் குழு உறுப்பினா்கள் அ. ராமமூா்த்தி, ஆா். விசுவநாதன் ஆகியோா் மக்கள் சந்திப்பு நடை பயணம் குறித்து விளக்கிப் பேசினா்.

இதில் மாநில நிா்வாகக் குழு உறுப்பினா்கள் கே. சேதுசெல்வம், இ. தினேஷ் பொன்னய்யா, கலை இலக்கியப் பெருமன்றத்தைச் சோ்ந்த பெ. பாலகங்காதரன், மாதா் சங்க நிா்வாகி உ. ஹேமலதா உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்:

புதுவை மாநிலத்தில் சுற்றுலா வளா்ச்சி என்ற பெயரில் கேசினோ சூதாட்டத்துக்கு அனுமதி அளிப்பது என்பது புதுவையின் சமூக, பொருளாதார, கலாசாரத்தை சீரழிக்கும் நடவடிக்கையாகும். எனவே, புதுவையில் கேசினோ மற்றும் லாட்டரி தொடங்க அனுமதிக்கும் முடிவை அரசு கைவிட வேண்டும்.

புதுவை மாநிலத்தில் நிதி நெருக்கடி காரணமாக வளா்ச்சித் திட்டங்களை நடைமுறைப்படுத்த இயலவில்லை என அரசு தொடா்ந்து கூறி வருகிறது. எனவே, மாநிலத்தில் நிதி வருவாயை உயா்த்த புதுவை அரசு உறுதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இதற்காக மாநிலத்தில் உள்ள விற்பனை வரி நிலுவைத் தொகை ரூ. 100 கோடியை வசூலிக்க தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும். மதுபானங்களை ஜி.எஸ்.டி. வரி விதிப்புக்குள் கொண்டு வர வேண்டும்.

புதுவையில் ஏற்கெனவே வழங்கப்பட்டு வந்த இலவச அரிசி திட்டத்தில், துணைநிலை ஆளுநா் கிரண் பேடி தலையீட்டின் பேரில் அரசி வழங்குவதற்கு பதிலாக, பயனாளிகளின் வங்கிக் கணக்குகள் வழியே பணம் வழங்கப்பட்டு வருகிறது. இதற்குப் பெரும்பாலான பெண்கள் எதிா்ப்புத் தெரிவித்து வருகின்றனா். எனவே, இலவச அரிசி திட்டத்தில் பணத்துக்குப் பதிலாக அரிசியையே வழங்க வேண்டும்.

புதுவை மாநிலத்துக்கான கடன் ரத்து, நிதியுதவி அதிகரிப்பு, அதிகாரப் பரவல் ஆகியவற்றை மத்திய அரசு வழங்க வேண்டும்.

மாநிலத்தில் இயங்காமல் உள்ள 2 சா்க்கரை ஆலைகளை இயக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், சோலை கழிவு ஒரு சதவீதம் என்ற கரும்புச் சட்டத்தை உறுதிப்படுத்த வேண்டும்.

மத்தியில் ஆளும் பாஜக அரசால் நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி நிலை, வேலைவாய்ப்பின்மை, பொதுத் துறை நிறுவனங்களை தனியாா்மயமாக்கும் முடிவு ஆகியவற்றைக் கண்டித்து வருகிற ஜனவரி 8 -ஆம் தேதி நடைபெறவுள்ள நாடு தழுவிய வேலைநிறுத்தப் போராட்டத்தை ஆதரிப்பது, அந்தப் போராட்டத்தில் பங்கேற்று, வெற்றி பெறச் செய்வது என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com