சுடச்சுட

  

  புதுவை மாநிலத்தில் கட்டாய தலைக்கவச சட்டம் திங்கள்கிழமை முதல் அமலுக்கு வந்தது. இதையொட்டி, புதுச்சேரி நகரின் முக்கிய இடங்களில் போக்குவரத்து போலீஸார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
  புதுவையில் தலைக்கவசம் அணிய வேண்டியது கட்டாயம் என கடந்த 2017-ஆம் ஆண்டு, மே மாதம் முதல்வர் வே. நாராயணசாமியால் அறிவிக்கப்பட்டது. ஆனால், பொதுமக்கள் எதிர்ப்புத் தெரிவித்ததால், கட்டாய தலைக்கவச சட்டம் தளர்த்தப்பட்டது.
  இதனிடையே, கடந்த 4-ஆம் தேதி நடைபெற்ற சாலைப் பாதுகாப்பு வார விழாவில் பங்கேற்ற முதல்வர் வே. நாராயணசாமி, 2 மாதங்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திய பிறகு, கட்டாய தலைக்கவச சட்டம் படிப்படியாக அமல்படுத்தப்படும் என்றார்.
  இதற்கு எதிர்ப்புத் தெரிவித்த துணைநிலை ஆளுநர் கிரண் பேடி, நடைமுறையில் இருக்கும் தலைக்கவச சட்டத்துக்கு எதிராக முதல்வர் நாராயணசாமி செயல்படுவதாகக் குற்றஞ்சாட்டினார். மேலும், கட்டாய தலைக்கவச சட்டத்தை அமல்படுத்துமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
  இந்த நிலையில், புதுவை மாநிலத்தில் இரு சக்கர வாகனத்தில் செல்வோர் திங்கள்கிழமை (பிப்.11) முதல் தலைக்கவசம் அணிந்து செல்ல வேண்டும் என டிஜிபி சுந்தரி நந்தா உத்தரவிட்டார்.
  இதையடுத்து, புதுவையில் கட்டாய தலைக்கவச சட்டம் திங்கள்கிழமை முதல் அமலுக்கு வந்தது. இதையொட்டி, போக்குவரத்து போலீஸார் புதுச்சேரியில் மரப்பாலம், இந்திரா காந்தி சிலை சந்திப்பு, ராஜீவ் காந்தி சிலை சந்திப்பு உள்ளிட்ட நகரின் முக்கிய சந்திப்புகளில் சோதனை மேற்கொண்டனர்.
  இதில், தலைக்கவசம் அணியாமல் வந்த இரு வாகன ஓட்டிகளுக்கு போலீஸார் அபராதம் விதித்ததுடன் எச்சரித்தும் அனுப்பினர்.
  மேலும், தலைக்கவசம் அணியாமல் சென்ற இரு சக்கர வாகன ஓட்டிகளின் வாகன எண்களை குறிப்பெடுத்துக் கொண்டனர். இதைக் கொண்டு வாகன உரிமையாளர்களுக்கு அழைப்பாணை அனுப்பி, நீதிமன்றத்தில் அபராதம் செலுத்த நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
  மூன்று முறை பிடிபட்டால் ஓட்டுநர் உரிமம் ரத்து:
  இதுகுறித்து போக்குவரத்து முதுநிலை எஸ்.பி. ராகுல் அல்வால் கூறியதாவது:
  காலையில் பள்ளி, கல்லூரி செல்வோர், பணிக்குச் செல்வோரை தொந்தரவு செய்யாமலும், அலைக்கழிக்க விரும்பாமலும் அவர்களுக்கு ஸ்பாட் பைன் (அதே இடத்தில் அபராதம்) விதிப்பதைத் தவிர்த்து, அவர்களின் வாகன எண்களைப் பதிவு செய்து, நீதிமன்றத்தில் அபராதத்தை செலுத்த நோட்டீஸ் வழங்க நடவடிக்கை எடுத்து வருகிறோம்.
  தலைக்கவசம் அணியாதவர்களுக்கு முதல் முறை பிடிபட்டால் ரூ.100-ம், இரண்டாவது முறை ரூ.300-ம் அபராதமாக விதிக்கப்படும். மூன்றாவது முறை பிடிபட்டால் ஓட்டுநர் உரிமம் தகுதி நீக்கம் செய்யப்படும் என்றார் அவர்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai