சுடச்சுட

  

  புதுவையில் தலைக்கவசத்தை உடைத்து அதிமுகவினர் போராட்டம்

  By DIN  |   Published on : 13th February 2019 09:45 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  கட்டாய தலைக்கவசம் சட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து, புதுவை சட்டப்பேரவை வளாகத்தில் தலைக்கவசத்தை உடைத்து அதிமுக எம்.எல்.ஏ.க்கள் செவ்வாய்க்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
  புதுவை சட்டப்பேரவை அதிமுக குழுத் தலைவர் ஆ.அன்பழகன் தலைமையில் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் பேரவையில் செவ்வாய்க்கிழமை காலை கூடினர்.
  அப்போது,  அன்பழகன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
  உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி தலைக்கவசம் அணிந்து செல்ல உகந்த வகையில், புதுச்சேரியில் போக்குவரத்து சூழல் இல்லை. ஒவ்வொரு 50 மீட்டருக்குள் ஒரு சாலை சந்திப்பு வருகிறது. நகரத்தில் 100 பள்ளிகள், அரசு அலுவலகங்கள், மருத்துவமனைகள் உள்ளிட்டவை உள்ளன. எனவே, நகரப் பகுதியை தவிர்த்து தலைக்கவசம் அணிவதைக் கட்டாயமாக்கலாம். போக்குவரத்து வார விழாவில் முதல்வர் தலைக்கவசம் அணிவதன் அவசியம் குறித்துப் பேசி, 3 மாத காலத்துக்குள் தலைக்கவசம் அணிவதை படிப்படியாக கட்டாயமாக்கலாம் என்றார். உடனடியாக ஆளுநர் கிரண் பேடி, "முதல்வர் என்ன மூன்று மாதம் அவகாசம் தருவது,  உடனடியாக அமல்படுத்த வேண்டும்' என்று டிஜிபியை அழைத்து உத்தரவிட்டார்.
  இதையடுத்து, அவரும் தலைக்கவசம் வாங்குவதற்குக்கூட அவகாசம் தராமல், மறுநாள், இரு சக்கர வாகன ஓட்டிகள் கட்டாயம் தலைக்கவசம் அணிய வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தார்.
  ஏற்கெனவே, போக்குவரத்துத் துறை அமைச்சர் தலைமையில் அமைக்கப்பட்ட குழுவிடம் நகரப் பகுதியைத் தவிர்த்து, பிற பகுதிகளில் அமல்படுத்தலாம் என்று ஆலோசனை வழங்கியுள்ளோம்.
  நடைபாதை ஆக்கிரமிப்புகள் மீது நடவடிக்கை இல்லை, விளம்பரப் பதாகைகள் அகற்றப்படவில்லை. அரசின் தவறான முடிவால் ஊதியம் கிடைக்காமல் பாதிக்கப்பட்டுள்ள 10 ஆயிரம் ஊழியர்களில், 100-க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர். 
  ஏ.எஃப்.டி. பஞ்சாலையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்களுக்கு ஓய்வூதியம் கிடைக்காததால், கடந்த 5 ஆண்டுகளில் 130-க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர்.
  இதற்கெல்லாம் நடவடிக்கை எடுக்காமல், தலைக்கவசம் சட்டத்தை அமல்படுத்துவதில் மட்டும் ஆளுநர் தீவிரம் காட்டுவது ஏன்? திங்கள்கிழமை ஒரே நாளில் 11 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மீது தலைக்கவசம் அணியாததற்கு வழக்குப் பதிவு செய்துள்ளனர். இந்த வழக்குகளை ரத்து செய்ய வேண்டும் என்றார் அன்பழகன்.
  பின்னர்,  கட்டாய தலைக்கவச சட்டத்துக்கு எதிராக கோஷம் எழுப்பி, அதிமுக எம்.எல்.ஏ.க்கள் தலைக்கவசத்தை உடைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
  போராட்டத்தில் எம்.எல்.ஏ.க்கள் அன்பழகன்,  பாஸ்கர், வையாபுரி மணிகண்டன் ஆகியோர் பங்கேற்றனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai