கூட்டுறவு சங்கம் மூலம் வெளிநாட்டு மணலை இறக்குமதி செய்ய வேண்டும்: இந்திய கம்யூனிஸ்ட் கோரிக்கை

புதுவை மாநில கூட்டுறவு கட்டட மையம் மூலம் வெளிநாட்டு மணலை இறக்குமதி செய்ய மாநில அரசு நடவடிக்கை எடுக்க

புதுவை மாநில கூட்டுறவு கட்டட மையம் மூலம் வெளிநாட்டு மணலை இறக்குமதி செய்ய மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.
அந்தக் கட்சியின் புதுவை மாநிலக் குழுக் கூட்டம் புதுச்சேரி காமராஜர்நகர் தொகுதிக்கு உள்பட்ட தனியார் அரங்கில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.  
கட்சியின் காமராஜர்நகர் தொகுதிச் செயலர் துரைசெல்வம் தலைமை வகித்தார்.  தேசிய நிர்வாகக்குழு உறுப்பினரும், கட்சியின் புதுவை பொறுப்பாளருமான எஸ்.அஜீஸ் பாஷா சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார்.
தீர்மானங்கள் குறித்து கட்சியின் புதுவை மாநிலச் செயலர் அ.மு.சலீம் கூறியதாவது:
புதுவையில் பேரவைத் தலைவரால் காலியிடமாக அறிவிக்கப்பட்ட தட்டாஞ்சாவடி தொகுதியை மத்திய தேர்தல் ஆணையம் இதுவரை காலியிடமாக அறிவிக்கவில்லை.  எனவே, உடனடியாக காலியிடமாக இதை அறிவிக்க வேண்டும். தமிழகத்தில் இருப்பது போல 69 சதவீத இடஒதுக்கீடு சட்டத்தை புதுவையிலும் கொண்டுவர வேண்டும்.  
புதுச்சேரியில் வெங்கட்ட சுப்பரெட்டியார் சிலை,  மரப்பாலம் பகுதியில் சிக்னல்களை இயக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். 
மணல் தட்டுப்பாட்டைப் போக்க வெளிநாட்டில் இருந்து மணல் இறக்குமதி செய்ய தனியாருக்கு உரிமம் வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  இதற்கான உரிமத்தை புதுவை மாநில  கூட்டுறவு கட்டட மையத்துக்கு தான் வழங்க வேண்டும்.  இதன் மூலம் அரசுக்கு கூடுதல் வருவாய் கிடைக்கும். 
தமிழகத்தில் ஏழைகளின் குடும்ப ஆண்டு வருவாய் ரூ.24,000 ஆக உள்ளது. ஆனால், புதுவையில் ரூ.75,000 ஆக உள்ளது. இதனால் புதுவையை சேர்ந்த ஏழைகள் ஜிப்மரில் இலவச சிகிச்சை பெற முடியாத நிலை உள்ளது. எனவே, புதுவை ஏழைகள் ஜிப்மரில் சிகிச்சை பெற புதுவை அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் சலீம்.
கூட்டத்தில்  முன்னாள் அமைச்சர் இரா.விசுவநாதன், தேசியக்குழு உறுப்பினர் ராமமூர்த்தி,  முன்னாள் எம்.எல்.ஏ. நாரா.கலைநாதன்,  துணைச் செயலர்கள் வி.எஸ்.அபிஷேகம்,  பி.ஜெகநாதன்,  பொருளாளர் சுப்பையா,  மாநில நிர்வாகக்குழு உறுப்பினர்கள் சேதுசெல்வம்,  தினேஷ் பொன்னையா  உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com