விசாரணைக்கு அழைத்துச் சென்றவர்களை விடுவிக்கக் கோரி காவல் நிலையம் முற்றுகை

வில்லியனூர் அருகே காங்கிரஸ் பிரமுகர் வீட்டில் வெடிகுண்டு வீசப்பட்ட சம்பவம் தொடர்பாக விசாரணைக்கு

வில்லியனூர் அருகே காங்கிரஸ் பிரமுகர் வீட்டில் வெடிகுண்டு வீசப்பட்ட சம்பவம் தொடர்பாக விசாரணைக்கு அழைத்துச் சென்றவர்களை விடுவிக்கக் கோரி, பொது மக்கள் மங்கலம் காவல் நிலையத்தை செவ்வாய்க்கிழமை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
புதுவை மாநிலம் வில்லியனூர் அருகே மணக்குப்பம் பகுதியைச் சேர்ந்த காங்கிரஸ் பிரமுகர் சபரிகிரீசன் (31) வீட்டில் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவில் மர்ம நபர்கள் நாட்டு வெடிகுண்டுகளை வீசிவிட்டுச் சென்றனர்.  இதுகுறித்து மங்கலம் போலீஸார் வழக்குப் பதிந்து, கடலூர் மாவட்டம், நல்லாத்தூர் கிராமத்தைச் சேர்ந்த மதி (30), மணி (28), கார்த்தி (32) ஆகிய மூவரை சந்தேகத்தின் பேரில் பிடித்து  விசாரித்தனர்.
இவர்களை திங்கள்கிழமை இரவு முழுவதும் காவல் நிலையத்தில் வைத்திருந்ததால் ஆத்திரமடைந்த, நல்லாத்தூர் பகுதி மக்கள், உறவினர்கள், பாமக கட்சியைச் சேர்ந்தவர்கள் செவ்வாய்க்கிழமை காலை தவளக்குப்பம் - மடுகரை சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.
 இதையடுத்து அங்கு வந்த அப்பகுதி போலீஸாரின் சமாதானப் பேச்சுவார்த்தைக்குப் பிறகு, மறியலில் ஈடுபட்டோர் கலைந்து சென்றனர்.
இதையடுத்து அவர்கள் அனைவரும் மங்கலம் காவல் நிலையத்துக்குச் சென்று, அங்கு பிடித்து வைக்கப்பட்டிருக்கும் மூவரையும் விடுவிக்க வேண்டும் என வலியுறுத்தி, முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர். 
அவர்களிடம் காவல் ஆய்வாளர் பழனிவேல் பேச்சுவார்த்தை நடத்தி, பிடித்து வரப்பட்ட கார்த்தி, மணி, மதி ஆகிய மூவரையும் விடுவித்தார். இதையடுத்து காவல்நிலையத்தை முற்றுகையிட்டவர்கள் கலைந்து சென்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com