7 -ஆவது ஊதியக்குழு பரிந்துரைகள்: அரசாணையை தேர்தலுக்கு முன்பே வெளியிடவேண்டும்
By DIN | Published On : 14th February 2019 09:25 AM | Last Updated : 14th February 2019 09:25 AM | அ+அ அ- |

7-ஆவது ஊதியக்குழு பரிந்துரைகளை அமல்படுத்துவதற்கான அரசாணையை தேர்தலுக்கு முன்பே வெளியிட வேண்டும் என சொசைட்டி கல்லூரி ஆசிரியர்கள் வலியுறுத்தினர்.
அரசு சொசைட்டி கல்லூரிகளின் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லாத ஊழியர்களுக்கு 7-ஆவது ஊதியக்குழுவின் பரிந்துரைகளை அமல்படுத்திட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி புதுவை மாநிலத்தில் அனைத்து சொசைட்டி கல்லூரி ஆசிரியர்களும், ஊழியர்களும் கடந்த ஜனவரி 18-ஆம் தேதி முதல் 28-ஆம் தேதி வரை பணிப் புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில், முதல்வர் வே. நாராயணசாமி, கூட்டமைப்பு பிரதிநிதிகளுடன் நடத்திய பேச்சுவார்த்தையில், அரசு கல்லூரிகளுக்கு 7-ஆவது ஊதியக்குழுவின் பரிந்துரைகளை அமல்படுத்தும் அதே தேதியில் அனைத்து அரசு சொசைட்டி கல்லூரிகளுக்கும் வழங்க உறுதியளித்தார். இதையடுத்து சொசைட்டி கல்லூரி ஆசிரியர்கள் போராட்டத்தை கைவிட்டு ஜனவரி 29-ஆம் தேதி முதல் பணிக்குத் திரும்பினர்.
இந்த நிலையில் புதுவை மாநில சொசைட்டி கல்லூரிகளின் ஆசிரியர் மற்றும் ஆசிரியரல்லாத ஊழியர் சங்கங்களின் கூட்டமைப்பின் அவசர செயற்குழு கூட்டம் புதுச்சேரியில் அண்மையில் நடைபெற்றது.
கூட்டத்துக்கு தலைவர் டி. ராம்குமார் தலைமை வகித்தார். செயலாளர் பி. பரசுராமன், பொருளாளர் என். மீனாட்சி சுந்தரம் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
இதில், முதல்வர் அளித்த வாக்குறுதியின்படி, அரசு கல்லூரிகளுக்கு 7-ஆவது ஊதியக்குழு பரிந்துரைகளை அமல்படுத்தும் அதே தேதியில், சொசைட்டி கல்லூரி ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களுக்கும் வழங்கிடும் வகையிலான அரசாணையை தேர்தல் நடத்தை நெறிமுறைகள் அமலாக்கப்படுவதற்கு முன்பே வெளியிட வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.