சர்வாதிகாரியாக செயல்படுகிறார் ஆளுநர்: முதல்வர் குற்றச்சாட்டு

புதுவை துணை நிலை ஆளுநர் கிரண் பேடி சர்வாதிகாரி போலச் செயல்படுகிறார் என்று முதல்வர் வே.நாராயணசாமி குற்றஞ்சாட்டினார்.

புதுவை துணை நிலை ஆளுநர் கிரண் பேடி சர்வாதிகாரி போலச் செயல்படுகிறார் என்று முதல்வர் வே.நாராயணசாமி குற்றஞ்சாட்டினார்.
புதுச்சேரியில் ஆளுநர் மாளிகை முன் ஆளுநர் கிரண் பேடியை கண்டித்து புதன்கிழமை தர்னாவில் ஈடுபட்ட முதல்வர் நாராயணசாமி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி: கடந்த இரண்டரை ஆண்டுகளாக புதுவையின் வளர்ச்சிக்கு ஆளுநர் கிரண் பேடி குந்தகம் விளைவித்து வருகிறார். சர்வாதிகாரிபோலச் செயல்படுகிறார். இந்த விஷயங்களை மக்கள் மத்தியில் கொண்டு செல்லவே, இந்த தர்னாவில் ஈடுபட்டுள்ளோம். 
அண்மையில் நடைபெற்ற சாலைப் பாதுகாப்பு வார விழாவில் நான் (முதல்வர்) பேசும் போது, தலைக்கவசத்தின் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி, படிப்படியாக  அதனை நடைமுறைப்படுத்தலாம் என்று தெரிவித்திருந்தேன். 
ஆனால், கிரண் பேடியோ இந்த விஷயத்தை தன்னிச்சையாக, அராஜகமான முறையில் கையாண்டார். ஆளுநரின் இந்தச் செயல்பாடு அவரது பதவிக்கே இழுக்கு. மேலும், அவர் இலவச அரிசி வழங்க அனுமதி தரவில்லை. அதற்கான கோப்புகளை திருப்பி அனுப்பினார். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு தொடர்ந்து தொல்லை கொடுத்து  வருகிறார். வேலைவாய்ப்புக்கும் தடையாக இருக்கிறார். குறிப்பாக, காவலர் பணிக்கான தேர்வின் போது, வயது வரம்பை  உயர்த்துவது தொடர்பான கோப்புக்கும் அனுமதி தரவில்லை.  இலவச  வேட்டி, சேலை வழங்குவதற்கான கோப்புக்கும் ஒப்புதல் தரவில்லை.  ஏஎப்ஃடி பஞ்சாலைத்  தொழிலாளர்களுக்கு விருப்ப ஓய்வு பெற்றவர்களுக்கான நிதியை கொடுப்பதற்கான கோப்புக்கும் அனுமதி  கிடைக்கவில்லை.  அரசு  உதவி பெறும்  பள்ளிகளுக்கு மானியம் வழங்குவதையும் தடுத்து வருகிறார்.  இதில், அவருடன் என்.ஆர். காங்கிரஸýம் சேர்ந்துள்ளது. மொத்தம் 39 மக்கள் பிரச்னைகள் தொடர்பாக உடனடியாகத் தீர்வு காண வேண்டும். அனைத்து கோப்புகளுக்கும் அவர் ஒப்புதல் தரும் வரை போராட்டம்  தொடரும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com