திருமலைராயன்பட்டினத்தில் நாளை மாசிமக சமுத்திர தீர்த்தவாரி

திருமலைராயன்பட்டினம் கடற்கரையில் திருக்கண்ணபுரம் ஸ்ரீ சௌரிராஜப் பெருமாள் உள்ளிட்ட பெருமாள்கள் தீர்த்தவாரி செவ்வாய்க்கிழமை (செப். 19) நடைபெறுகிறது.

திருமலைராயன்பட்டினம் கடற்கரையில் திருக்கண்ணபுரம் ஸ்ரீ சௌரிராஜப் பெருமாள் உள்ளிட்ட பெருமாள்கள் தீர்த்தவாரி செவ்வாய்க்கிழமை (செப். 19) நடைபெறுகிறது. இதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பர் என்பதால், சாலைகளை தூய்மைப்படுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெறுகின்றன.
காரைக்கால் மாவட்டம், திருமலைராயன்பட்டினத்தில் ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படும் மாசிமகத் திருவிழாவில், பல்வேறு  கோயில்களில் இருந்து பெருமாள் ஒருங்கிணைந்து, சமுத்திர தீர்த்தவாரி நடைபெறுவது சிறப்புவாய்ந்ததாகும்.
நாகை மாவட்டம், திருக்கண்ணபுரம் ஸ்ரீ சௌரிராஜப் பெருமாள், திருமலைராயன்பட்டினம் வெள்ளை மண்டபத்துக்கு செவ்வாய்க்கிழமை நண்பகல் 12 மணயளவில் வந்தடைந்து, கருட வாகனத்தில் எழுந்தருளி, பவழக்கால் சப்பரத்தில் பட்டினச்சேரி பகுதி கடற்கரைக்கு எழுந்தருளவுள்ளார்.
திருக்கண்ணபுரம் பெருமாளை தேசிய நெடுஞ்சாலையில்  திருமலைராயன்பட்டினம் ஸ்ரீ வீழி வரதராஜப் பெருமாள் எதிர்கொண்டு அழைக்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதைத் தொடர்ந்து காரைக்கால் ஸ்ரீ நித்யகல்யாணப் பெருமாள், கோயில்பத்து ஸ்ரீ கோதண்டராமப் பெருமாள், நிரவி கரியமாணிக்கப் பெருமாள், திருமலைராயன்பட்டினம் ஸ்ரீ வீழி வரதராஜப் பெருமாள், ஸ்ரீ ரகுநாதப் பெருமாள், திருமருகல் ஸ்ரீ வரதராஜப் பெருமாள்  ஆகிய பெருமாள்கள் திருமலைராயன்பட்டினம் பகுதி பட்டனச்சேரி கடற்கரைக்கு எழுந்தருளி, கடலில் தீர்த்தவாரியில் ஈடுபடவுள்ளனர்.
திருக்கண்ணபுரம் சௌரிராஜப் பெருமாள் திருமலைராயன்பட்டினத்துக்கு வந்து தீர்த்தவாரியில் ஈடுபடுவது நூற்றாண்டுகளாக நடைபெறுவதாக சொல்லப்படுகிறது. 
இந்த பெருமாள் பல்லக்கில் இவ்வூருக்கு எழுந்தருளினாலும், நெல் மணிகள் கட்டப்பட்ட பவழக்கால் சப்பரத்தில் பட்டினச்சேரிக்கு சென்றடைகிறார். விவசாயம் செழிக்கவேண்டிய நோக்கில் அந்த காலத்திலேயே சப்பரத்தை சுற்றி நெல் கதிர்கள் கட்டப்பட்டு வந்துள்ளது, இப்போதும் தொடர்கிறது.
பல்வேறு ஊர்களில் மாசி மகத்தையொட்டி கடலில் தீர்த்தவாரியில் விநாயகர், முருகன், பெருமாள், அம்பாள் உள்ளிட்ட சுவாமிகள் ஈடுபட்டாலும், திருமலைராயன்பட்டினத்தில் மட்டும் பல்வேறு கோயில்களின் பெருமாள் சமுத்திர தீர்த்தவாரியில் ஈடுபடுவது சிறப்புக்குரியதாக சொல்லப்படுகிறது.
இந்த நிகழ்வைக்கான காரைக்கால் மட்டுமல்லாது சுற்றுவட்டார மாவட்டங்களில் இருந்து வைணவ பக்தர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் திருமலைராயன்பட்டினத்துக்கு வருகை தருவர். பல்வேறு பகுதிகளில் இருந்து சுவாமிகள் இவ்வூருக்கு எழுந்தருளுவதையொட்டி,  மேலையூர் முதல் வெள்ளை மண்டபம் மற்றும் சுவாமிகள் பட்டினச்சேரிக்குக்கு செல்லும் பாதைகளில்  தேங்கிக் கிடந்த குப்பைகள் அகற்றப்படுகின்றன. பல்வேறு சாலைகளில் கஜா புயலில் விழுந்துக் கிடந்த மரங்கள் அகற்றப்படுவதாக திருப்பட்டினம் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் ஜான்அரேலியஸ் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com