திருக்காஞ்சியில் மாசி மக விழா: ஆயிரக்கணக்கானோர் திரண்டனர்
By DIN | Published On : 20th February 2019 08:53 AM | Last Updated : 20th February 2019 08:53 AM | அ+அ அ- |

மாசி மகத்தையொட்டி, புதுவை மாநிலம் திருக்காஞ்சியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற தீர்த்தவாரியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.
புதுவை மாநிலம், வில்லியனூரை அடுத்த திருக்காஞ்சி சங்கராபரணி ஆற்றங்கரையில் மூவாயிரம் ஆண்டுகள் பழைமையான கங்கை வராக நதீஸ்வரர் திருத்தலம் அமைந்துள்ளது. ஆற்றங்கரையின் மற்றொரு பகுதியில் காசிவிஸ்வநாதர் கோயில் அமைந்துள்ளது.
இங்கு ஆண்டுதோறும் நடைபெறும் மாசி மக தீர்த்தவாரியின் போது, பொதுமக்கள் பலர் தங்களின் முன்னோர்களின் ஆன்மா சாந்தியடைய கங்கை வராக நதீஸ்வரர் மற்றும் காசி விஸ்வநாதர் கோயில் அமைந்துள்ள ஆற்றங்கரையில் புண்ணிய தர்ப்பணம் கொடுப்பது வழக்கம். காசியை விட வீசம் அதிகம் என்பதால், இந்த இடத்தில் புண்ணிய தர்ப்பணம் செய்வதன் மூலம் எவ்வித பாவம் செய்த ஆன்மாவாக இருந்தாலும் முக்தியடையும் என்பது ஐதீகம். இதன்படி, மாசி மகத்தை ஒட்டி செவ்வாய்க்கிழமை அதிகாலை முதலே ஏராளமான பக்தர்கள் இங்கு வந்து தங்களின் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர். முன்னதாக, நிகழாண்டு மாசி மகத் திருவிழா கடந்த 10 ஆம் தேதி இரு கோயில்களிலும் கொடியேற்றத்துடன் தொடங்கியது. திங்கள்கிழமை தேரோட்டமும், செவ்வாய்க்கிழமை தீர்த்தவாரியும் நடைபெற்றது. இதில் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த சுவாமிகள் அலங்கரிக்கப்பட்டு, ஊர்வலமாக வந்து கோயில் முன் போடப்பட்டிருந்த பந்தலில் நிறுத்தி வைக்கப்பட்டன. பொதுமக்கள் தர்ப்பணம் கொடுத்துவிட்டு, பந்தலில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த உற்சவர் சுவாமிகளை தரிசனம் செய்து வழிபட்டனர்.
காவல் கண்காணிப்பாளர் ரெங்கநாதன் தலைமையில் 150-க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
திருக்கனூரில்...
இதே போல, திருக்கனூர் சங்கராபரணி ஆற்றில் நடைபெற்ற தீர்த்தவாரியில் திருக்கனூர், குமராப்பாளையம், வழுதாவூர், முட்ராம்பட்டு ஆகிய பகுதிகளிலிருந்து வந்திருந்த உற்சவர் சுவாமிகள் தீர்த்தவாரி கண்டருளினார். கூனிச்சம்பட்டு சங்கராபரணி ஆற்றில் மணலிப்பட்டு, செட்டிப்பட்டு, கூனிச்சம்பட்டு, கே.ஆர்.பாளையம் உள்ளிட்ட கிராமங்களிலிருந்து வந்திருந்த சுவாமிகள் தீர்த்தவாரியில் பங்கேற்றன.
பாகூர் அருகே புதுக்குப்பம், நரம்பை, நல்லவாடு ஆகிய பகுதிகளில் சுற்றுப்புற கிராமங்களைச் சேர்ந்த சுவாமிகள் அலங்கரிக்கப்பட்டு கடற்கரைக்கு ஊர்வலமாகக் கொண்டு செல்லப்பட்டு, தீர்த்தவாரி செய்யப்பட்டது. காலாப்பட்டு கடற்கரையில் காலாப்பட்டு, பிள்ளைச்சாவடி, சின்ன காலாப்பட்டு, கனகசெட்டிகுளம் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த உற்சவர் சுவாமிகள் ஊர்வலமாக எடுத்துவரப்பட்டு, தீர்த்தவாரி நடைபெற்றது. இவற்றில் பொதுமக்கள் ஏராளமானோர் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.