மேம்பாலப் பணி தாமதம்: பொதுமக்கள் நூதன போராட்டம்

புதுச்சேரி அருகே அரும்பார்த்தபுரம் பகுதியில் நடைபெற்று வரும் மேம்பாலப் பணிகளை விரைவாக முடித்து,

புதுச்சேரி அருகே அரும்பார்த்தபுரம் பகுதியில் நடைபெற்று வரும் மேம்பாலப் பணிகளை விரைவாக முடித்து, பாலத்தை பயன்பாட்டுக்குக் கொண்டுவர வலியுறுத்தி, அப்பகுதி பொதுமக்கள் ஞாயிற்றுக்கிழமை நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
 அரும்பார்த்தபுரம் பகுதியில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை தவிர்ப்பதற்காக ரூ. 28 கோடியில் புதிதாக மேம்பாலம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. 
6 ஆண்டுகளுக்கு முன் தொடங்கப்பட்ட இப்பணி இதுவரை நிறைவடையவில்லை. இதனால், அரும்பார்த்தபுரம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த மக்கள் மிகுந்த பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர். 
 அப்பகுதி வழியாகச் செல்லும் வாகன ஓட்டிகளும் மிகவும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். மேலும், போக்குவரத்து மாற்றப்பட்டு வழுதாவூர், மூலக்குளம் வழியாக வாகனங்கள் சென்று வருகின்றன. 
அரும்பார்த்தபுரம், ஜிஎன் பாளையம், எழில் நகர், நடராஜர் நகர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து சவ ஊர்வலம் செல்வதற்கு மிகவும் சிரமமாக உள்ளது. 
 ஏற்கெனவே இருந்த பழைய சாலையில் ரயில்வே கேட் 
மூடப்பட்டதால், ஊர்வலத்தை தவிர்த்து சடலத்தை தோளில் சுமந்து கொண்டு, ரெயில்வே கேட்டை கடக்க வேண்டியுள்ளது. இல்லையேல் 2 கி.மீ தொலைவு சுற்றிச்செல்ல வேண்டும்.
 இந்த நிலையில், ஜிஎன் பாளையத்தில் ரயில்வே மேம்பாலப் பணிகளை விரைவாக முடிக்கக் கோரி ஞாயிற்றுக்கிழமை நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
 அங்குள்ள அய்யனார் கோயில் அருகில் 100-க்கும் மேற்பட்டோர் சவப்பாடை கட்டி அதில் ஒருவரை சடலம் போல படுக்க வைத்து சடங்குகள் செய்தனர். பெண்கள் ஒப்பாரி வைத்தனர். 
இதையடுத்து அங்கிருந்து சவப்பாடையை எடுத்துக் கொண்டு தாரை, தப்பட்டை முழங்க, சங்கு ஊதியபடி ஊர்வலமாகச் சென்றனர். அரும்பார்த்தபுரம் பாலத்தின் கீழ் ஊர்வலம் முடிவடைந்தது.  அங்கு அவர்கள், மேம்பாலப் பணிகளை விரைவாக முடிக்க வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.  இதில் அப்பகுதியைச் சேர்ந்த ஏராளமானோர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com