போராட்டத்தால்தான் முதியோர் உதவித்தொகைக்கு ஒப்புதல்
By DIN | Published On : 28th February 2019 08:57 AM | Last Updated : 28th February 2019 08:57 AM | அ+அ அ- |

ஆளுநர் மாளிகை முன் தர்னா போராட்டம் நடத்தியதால்தான் முதியோர் உதவித்தொகைக்கு ஒப்புதல் கிடைத்துள்ளது என்று முதல்வர் நாராயணசாமி தெரிவித்தார்.
புதுச்சேரி நெல்லித்தோப்பு தொகுதியைச் சேர்ந்த முதியோர், விதவை, மற்றும் கணவரால் கைவிடப்பட்டோர் என 295 பேருக்கு உதவித்தொகை வழங்கும் திட்டத்தின் தொடக்க நிகழ்ச்சி தனியார் அரங்கில் புதன்கிழமை நடைபெற்றது.
இதில், முதல்வர் வே.நாராயணசாமி கலந்து கொண்டு பயனாளிகளுக்கு உதவித்தொகை வழங்கிப் பேசியதாவது: நான் (முதல்வர்) 29 தொகுதிகளை ஒரு கண்ணாகவும், நெல்லித்தோப்பு தொகுதியை ஒரு கண்ணாகவும் பாவிப்பேன் எனக் கூறியிருந்தேன். அதன்படி, ஒரு கண்ணாக நெல்லித்தோப்பை பார்க்கிறேன். திட்டங்கள் அனைத்தையும் போராடி பெற வேண்டிய நிலையில் அரசு உள்ளது. முதியோர் ஓய்வூதியத்தை 2 ஆண்டுகளுக்குப் பிறகு புதிதாக இப்போது தான் வழங்குகிறோம். அதையும் நெல்லித்தோப்பு தொகுதியில் தான் தொடக்கிவைக்கிறோம். இலவச அரிசி, சென்டாக் கல்வி உதவித்தொகை, மாற்றுத் திறனாளிகளுக்கு நிதி உள்பட பல்வேறு திட்டங்களை செயல்படுத்த வேண்டிய நிலை உள்ளது. ஆனால், ஆளுநர் அவற்றுக்கு ஒப்புதல் தர இழுத்தடிக்கிறார். ஆளுநருக்கு எதிராக 6 நாள் தர்னா நடத்தியதால் முதியோர் உதவித்தொகை வழங்க அவர் ஒப்புதல் அளித்தார்.
இன்னும் 2 மாதங்கள் பொறுத்துக்கொண்டால் மத்தியில் ஆட்சி மாறும். அப்போது நிலைமை மாறும் என்றார் நாராயணசாமி.
சமூகநலத் துறை அமைச்சர் மு.கந்தசாமி பேசுகையில்,திறந்த வெளியில் ஆளுநர் மாளிகை முன் பனியில் படுத்து உறங்கி மக்களின் கோரிக்கைகளை நிறைவேறச் செய்தவர் முதல்வர் நாராயணசாமி. அவரது உழைப்பு, திறமைக்கு கிடைத்த பரிசைத்தான் தற்போது பெறுகிறீர்கள் என்றார். விழாவில், புதுவை அரசின் தில்லி சிறப்புப் பிரதிநிதி ஜான்குமார், மகளிர், குழந்தைகள் மேம்பாட்டுத் துறை இயக்குநர் யஷ்வந்தையா மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.