இலவச அரிசித் திட்ட நிதியைத்தான் பொங்கல் பரிசுக்கு மாற்றுகின்றனர்: புதுவை ஆளுநர் கிரண் பேடி

இலவச அரிசித் திட்டத்துக்கான நிதியைத்தான் பொங்கல் பரிசுத் திட்டத்துக்கு மாற்றுகின்றனர் என புதுவை துணைநிலை ஆளுநர் கிரண் பேடி தெரிவித்தார்.


இலவச அரிசித் திட்டத்துக்கான நிதியைத்தான் பொங்கல் பரிசுத் திட்டத்துக்கு மாற்றுகின்றனர் என புதுவை துணைநிலை ஆளுநர் கிரண் பேடி தெரிவித்தார்.
அனைத்து குடும்ப அட்டைகளுக்கும் பொங்கல் பரிசு வழங்குவது தொடர்பாக, முதல்வர் நாராயணசாமியிடம் செவ்வாய்க்கிழமை கேட்டதற்கு, குடிமைப்பொருள் வழங்கல் துறையில் ரூ. 20 கோடி வரை நிதி உள்ளது.
மீண்டும் அனைவருக்கும் பொங்கல் பரிசு வழங்குவதற்கான கோப்பினை ஆளுநருக்கு அனுப்பியுள்ளோம். நிதியில்லை என்று ஆளுநர் கூறுவது தவறான தகவல் என்றார்.
இதைத் தொடர்ந்து துணைநிலை ஆளுநர் கிரண் பேடி வெளியிட்ட செய்திக் குறிப்பு:
புதுவை மாநில குடிமைப் பொருள் வழங்கல் துறையில் பொங்கல் பரிசு வழங்க தனியாக தொகை எதுவும் ஒதுக்கப்படவில்லை. இலவச அரிசித் திட்டத்துக்கான நிதியைத்தான் இந்தத் திட்டத்துக்கு மாற்றுகின்றனர்.
கடந்த நவம்பர் 2018 முதல் வருகிற மார்ச் மாதம் வரை அரிசி விநியோகிக்கத் தேவையான ரூ. 78 கோடி நிதியை திட்டமிடல் மற்றும் நிதித் துறை கோரியுள்ளது. இதில், ரூ. 26 கோடி மட்டுமே உள்ள நிலையில் ரூ. 52 கோடி பற்றாக்குறை நிலவுகிறது. இதை ஒதுக்கீடு செய்யவே அரசிடம் போதிய நிதி இல்லை.
இந்த நிலையில், ஏழைகள் அல்லாத வறுமைக்கோட்டுக்கு மேல் உள்ளவர்களுக்கு பொங்கல் பரிசு வழங்குவதற்காக, முதல்வர் கூடுதலாக ரூ. 2 கோடி கேட்கிறார்.
ஆனால், நிதியுள்ளதாக தொடர்ந்து முதல்வர் பொதுவெளியில் தவறான தகவல்களை கூறி வருகிறார்.
அரசு அறிவிக்கையில் முதல்வர் ஒப்புதல்படிதான் சிவப்பு அட்டை உள்ள ஏழைகளுக்கு மட்டுமே பொங்கல் பரிசு தர முடிவு எடுக்கப்பட்டது. 
அதில் முதல்வர் கையெழுத்திட்டுள்ளார். குடிமைப் பொருள் வழங்கல் துறையில், இலவச அரிசிக்கான நிதியை இந்தத் திட்டத்துக்கு மாற்றுகிறார்கள்.
அரசு உத்தரவை தற்போது முதல்வர் மீறுகிறார். பொங்கல் பரிசுப் பொருள் அனைவருக்குமானதல்ல. அது ஏழைகளுக்கு மட்டும்தான் என்று குறிப்பிட்டுள்ளார்.
ஆனால், அனைத்து குடும்ப அட்டைகளுக்கும் பொங்கல் பரிசு வழங்கப்படும் என்று முதல்வர் அறிவிப்பிற்கான பணம், சிவப்பு அட்டை மற்றும் ஏழைகளின் அரிசித் திட்ட பணத்திலிருந்து வெட்டப்படும் என்பதே உண்மை. இதற்கு முதல்வர் என்ன கூறுவார்?
வறுமைக்கோட்டுக்குக் கீழ் உள்ளவர்களுக்கான திட்ட நிதியிலிருந்து வழங்கப்பட்ட இந்தப் பணத்தை, அரிசி திட்டத்திலிருந்து வழங்கினால், பிற்காலத்தில் அரிசித் திட்டத்துக்கு முழுமையான நிதி வழங்க முடியாத நிலை ஏற்பட்டால், துணைநிலை ஆளுநர் அலுவலகம்தான் தரவில்லை என முதல்வர் பழி சுமத்துவார் என்றார் ஆளுநர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com