கிரிக்கெட் போட்டி: புதுச்சேரி அணி ரஞ்சியில் வெற்றி; கூச் பிகார் கோப்பை போட்டியில் முன்னிலை

புதுச்சேரி கிரிக்கெட் அணி ரஞ்சிப் போட்டியில் திங்கள்கிழமை வெற்றி பெற்றுள்ள நிலையில், கூச் பிகார் கோப்பைக்கான போட்டியில் முன்னிலை வகித்து வருகிறது.


புதுச்சேரி கிரிக்கெட் அணி ரஞ்சிப் போட்டியில் திங்கள்கிழமை வெற்றி பெற்றுள்ள நிலையில், கூச் பிகார் கோப்பைக்கான போட்டியில் முன்னிலை வகித்து வருகிறது.
இந்திய கிரிக்கெட் வாரியம் நடத்தும் ரஞ்சிக் கோப்பைக்கான போட்டி ஆந்திர மாநிலம், அனந்தபூர் விளையாட்டு மைதானத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் புதுச்சேரி, மணிப்பூர் அணிகள் பங்கேற்று விளையாடின. முதலில் பேட் செய்த மணிப்பூர் அணியினர் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 132 ரன்கள் எடுத்தனர். தொடர்ந்து, களமிறங்கிய புதுச்சேரி அணியினர் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 238 ரன்களை எடுத்தனர். இதையடுத்து இரண்டாவது இன்னிங்சை விளையாடிய மணிப்பூர் அணி 110 ரன்களில் ஆல் அவுட் ஆனது. இதனை புதுச்சேரி அணியின் தொடக்க ஆட்டக்காரர்களே அடித்து அணியை வெற்றி பெறச் செய்தனர். இப்போட்டியில் புதுச்சேரி அணியின் பந்துவீச்சாளர் பங்கஜ்சிங் 8 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதில் வெற்றி பெற்ற புதுச்சேரி அணிக்கு 7 புள்ளிகள் வழங்கப்பட்டன.
கூச் பிகார் கோப்பை போட்டி:
புதுச்சேரி அருகே பால்மைரா மைதானத்தில் நடைபெற்று வரும் 19 வயதுக்கு உள்பட்டோருக்கான கூச் பிகார் கோப்பைக்கான போட்டியில் அருணாச்சல பிரதேச அணியும், புதுச்சேரி அணியும் மோதின. 
இதில் முதலில் பேட் செய்த புதுச்சேரி அணி முதல் நாள் ஆட்ட நேர இறுதியில் 9 விக்கெட் இழப்பிற்கு 359 ரன்களை குவித்தது. 
இரண்டாவது நாளான செவ்வாய்க்கிழமை தொடர்ந்து ஆடிய புதுச்சேரி அணி 9 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 500 ரன்களை சேர்த்து ஆட்டத்தை டிக்ளேர் செய்தது. இதில் அணி வீரர் அர்யன்பங்கார் 149 ரன்களையும், அர்பாஸ் உதீன் 119 ரன்களையும், லோக்கேஷ் 104 ரன்களையும் விளாசினர். இப்போட்டியில், அருணாச்சல பிரதேச அணியின் ஷேஷாக் வர்மா 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். பின்னர், களமிறங்கிய அருணாச்சல பிரதேச அணி 165 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. புதுச்சேரி அணியின் அர்பாஸ் உதீன் 7 விக்கெட்டுகளையும், அர்யன் பங்கார் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். 
தொடர்ந்து இரண்டாவது இன்னிங்சில் அருணாச்சல பிரதேச அணி 2 விக்கெட் இழப்புக்கு 28 ரன்களை எடுத்து விளையாடி வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com