இடதுசாரிகள் மீதான அவதூறு விமர்சனம்: ஆளுநர் மன்னிப்பு கேட்க முதல்வர் வலியுறுத்தல்

இடதுசாரி கட்சிகள் மீது அவதூறான வகையில் விமர்சனம் செய்த புதுவை துணை நிலை ஆளுநர் கிரண் பேடி மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று புதுவை முதல்வர்


இடதுசாரி கட்சிகள் மீது அவதூறான வகையில் விமர்சனம் செய்த புதுவை துணை நிலை ஆளுநர் கிரண் பேடி மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று புதுவை முதல்வர் வே.நாராயணசாமி வலியுறுத்தினார்.
இடதுசாரிகள் பணம் பெற்றுக் கொண்டு போராட்டங்களை நடத்தி வருகின்றனர் என்று அவதூறாக சமூகவலை தளத்தில் விமர்சனம் செய்த ஆளுநர் கிரண் பேடியைக் கண்டித்தும், அதற்கு வருத்தம் தெரிவிக்க வேண்டும் என வலியுறுத்தியும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஆகிய நான்கு கட்சிகள் இணைந்து புதுவை சட்டப்பேரவை எதிரே சனிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில்
ஈடுபட்டன.
ஆர்ப்பாட்டத்தில் முதல்வர் நாராயணசாமி சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு பேசியதாவது: 
பிரதமர் நரேந்திர மோடியின் முகவராகத்தான் துணை நிலை ஆளுநர் கிரண் பேடி செயல்பட்டு வருகிறார். புதுவையில் பல துணை நிலை ஆளுநர்கள் பதவியில் இருந்துள்ளனர். ஆனால், மாநில மக்களுக்கு குந்தகம் விளைத்த முதல் துணை நிலை ஆளுநர் கிரண் பேடிதான். மக்கள் பயன் பெறும் நலத் திட்டங்களுக்கு அவர் முட்டுக்கட்டையிட்டு வருகிறார். கையூட்டுப் பெற்று போராட்டத்தை நடத்துகிறவர்கள் கம்யூனிஸ்ட் கட்சியினர் என்ற கருத்தைத் திரும்பப் பெற்று அவர் மன்னிப்பு கோரும் வரை இடதுசாரிகள் நடத்தும் போராட்டத்தில் காங்கிரஸ் கட்சியும் பங்கேற்கும் என்றார் முதல்வர் நாராயணசாமி.
இந்த ஆர்ப்பாட்டத்துக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் அ.மு.சலீம் தலைமை வகித்தார். இதில் முன்னாள் மாநிலச் செயலர்கள் இரா.விசுவநாதன், நாரா.கலைநாதன், மார்க்சிஸ்ட் கட்சியின் பிரதேச செயலர் ஆர். ராஜாங்கம், முன்னாள் செயலர்கள் பெருமாள், முருகன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் முதன்மைச் செயலர் தேவ. பொழிலன், ஐஎன்டியூசி நிர்வாகி ரவிச்சந்திரன், புதுவை அரசின் தில்லி சிறப்பு பிரதிநிதி ஜான்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com