காணும் பொங்கல்: புதுச்சேரி கடற்கரைச் சாலையில் இன்று வாகனங்களுக்குத் தடை

காணும் பொங்கலையொட்டி புதுச்சேரி கடற்கரைச் சாலை, வெள்ளை நகரப் பகுதியில் வாகன போக்குவரத்துக்கு

காணும் பொங்கலையொட்டி புதுச்சேரி கடற்கரைச் சாலை, வெள்ளை நகரப் பகுதியில் வாகன போக்குவரத்துக்கு வியாழக்கிழமை (ஜன.17) முற்றிலும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரியில் செவ்வாய்க்கிழமை பொங்கல், புதன்கிழமை மாட்டுப் பொங்கல் பண்டிகையைத் தொடர்ந்து வியாழக்கிழமை காணும் பொங்கல் கொண்டாடப்பட உள்ளது. 
 பொங்கல் பண்டிகை தொடர் விடுமுறையால், புதுச்சேரியில் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்துள்ளனர். இந்த நிலையில், காணும் பொங்கல் தினத்தன்று, ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் குடும்பத்துடன் புதுச்சேரி கடற்கரை, பாரதி 
பூங்கா, மணக்குள விநாயகர் கோவில், ஆரோவில் கடற்கரையில் ஆண்டுதோறும் குவிவது வழக்கம்.  
கடற்கரையில் குவியும் பொதுமக்கள், சுற்றுலா பயணிகளை கட்டுப்படுத்தவும், பாதுகாக்கவும் போலீஸார் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளனர்.  புதுச்சேரி ஒயிட் டவுன் பகுதி,  கடற்கரை சாலையில் வியாழக்கிழமை காலை 10 மணி முதல் மறுநாள் காலை 9 மணி வரை வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. 
கடற்கரையைச் சுற்றியுள்ள ஒயிட் டவுன் பகுதிக்குள் செல்லும் சாலைகள் அனைத்தும் தடுப்புக்கட்டைகள் மூலம் தடுக்கப்பட்டுள்ளன.  சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் தங்கள் வாகனங்களை பழைய துறைமுகம் பகுதியில் நிறுத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 
புதுச்சேரி கடலில் சுற்றுலா பயணிகள் இறங்கி விளையாடவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த முறை சுற்றுலா பயணிகள் கடலில் இறங்குவதை தடுக்க தலைமைச் செயலகம் முதல் சீகல்ஸ் ஹோட்டல் வரை,  தடுப்பு கட்டைகள் அமைக்கப்பட்டிருந்தன.  
ஆனால், இந்த முறை அதுபோல் எதுவும் தடுப்புகள் அமைக்கப்படவில்லை. கிழக்கு காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதிகளில் கடற்கரை, வெள்ளை நகரம், சுற்றுலா தளங்களில் 300 போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.
 மேலும், கடற்கரைச் சாலையில் பாதுகாப்பு கருதி பறந்து கண்காணிக்கும் கேமரா (ட்ரோன்)  பயன்படுத்தப்பட உள்ளது.
 இது குறித்து எஸ்பி மாறன் கூறும்போது, பொங்கல் பண்டிகையையொட்டி கிழக்கு பகுதிக்குள்பட்ட இடங்களில் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 
 வியாழக்கிழமை காணும் பொங்கல் கொண்டாடப்படும் நிலையில், கடற்கரைக்கு ஏராளமானோர் கூடுவர் என்பதால் பாதுகாப்புப் பணியில் 300 போலீஸார் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.  பறக்கும் கேமரா மூலம் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்படும். 
கடற்கரையில் பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் இறங்காத வகையில் காண்காணிப்பு தீவிரப்படுத்தப்படும் என்றார்.
  இது போல, புதுச்சேரியில் உள்ள அனைத்து கடற்கரைப் பகுதிகளிலும் காணும் பொங்கலையொட்டி பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com