கல்லூரி மாணவர்கள் பேரணி, ஆர்ப்பாட்டம்
By DIN | Published On : 29th January 2019 09:29 AM | Last Updated : 29th January 2019 09:29 AM | அ+அ அ- |

அரசுக் கல்லூரிக்கு இணையாக சொசைட்டி கல்லூரிக் கட்டணத்தை குறைக்க வலியுறுத்தி, புதுச்சேரியில் கல்லூரி மாணவ, மாணவிகள் திங்கள்கிழமை பேரவை நோக்கி பேரணி நடத்தியதுடன், ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர்.
புதுச்சேரி சொசைட்டி கல்லூரி ஆசிரியர்கள் 7-ஆவது ஊதியக்குழு பரிந்துரைகளை அமல்படுத்த வலியுறுத்தி, கடந்த 18-ஆம் தேதி முதல் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனால் மாணவ, மாணவிகளின் கல்வி பாதிக்கப்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து, சொசைட்டி கல்லூரி ஆசிரியர்களின் போராட்டத்தை அரசு முடிவுக்கு கொண்டுவர வேண்டும், அரசுக் கல்லூரிக்கு இணையாக சொசைட்டி கல்லூரி கட்டணத்தைக் குறைக்க வேண்டும், அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, இந்திய மாணவர் சங்கம் சார்பில், கதிர்காமம் இந்திரா காந்தி கலை, அறிவியல் கல்லூரி, லாஸ்பேட்டை மகளிர் தொழில்நுட்பக் கல்லூரி மாணவ, மாணவிகள் கடந்த 23-ஆம் தேதி முதல் வகுப்புகளை புறக்கணித்து பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், மாணவ, மாணவிகள் திங்கள்கிழமை சட்டப்பேரவையை முற்றுகையிடுவதற்காக பேரணியாகச் சென்றனர். அவர்களை போலீஸார், அரசு பொது மருத்துவமனை அருகே தடுத்து நிறுத்தினர்.
அங்கு மாணவ, மாணவிகள் கோரிக்கைளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
பின்னர், மேற்கண்ட கல்லூரிகள் சார்பில், இந்திய மாணவர் சங்க நிர்வாகிகள், முதல்வர் வே. நாராயணசாமியை சந்தித்து கோரிக்கை மனுவை அளித்தனர்.
இதையடுத்து மாணவ, மாணவிகள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.