தொலைக்காட்சிப் பெட்டி வெடித்து விபத்து: மூதாட்டி, இளைஞர் காயம்
By DIN | Published On : 29th January 2019 09:24 AM | Last Updated : 29th January 2019 09:24 AM | அ+அ அ- |

புதுச்சேரியில் எரிவாயு அடுப்பில் இருந்து பரவிய தீயால் தொலைக்காட்சி பெட்டி வெடித்துச் சிதறியது. இதில் சிக்கி பாட்டி, பேரன் தீக்காயமடைந்தனர்.
புதுச்சேரி வைத்திக்குப்பம் மாரியம்மன் கோவில் வீதியைச் சேர்ந்த குப்புராஜ் மனைவி முருகம்மாள் (60). இவரது உறவினர் மகன் மரக்காணம் கூனிமேட்டைச் சேர்ந்த ராமச்சந்திரன் மகன் பிரனேஷ் (34). தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.
முருகம்மாளுக்கு யாரும் இல்லாததாலும், பிரனேஷ் தினமும் மரக்காணத்திலிருந்து புதுச்சேரிக்கு வந்து செல்ல முடியாத காரணத்தினாலும், இருவரும் ஒருவருக்கொருவர் துணையாக வசித்து வந்தனர்.
இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை இரவு வழக்கம்போல இருவரும் சாப்பிட்டுவிட்டு தூங்கினர். திங்கள்கிழமை காலை கண் விழித்த முருகம்மாள், சுடுதண்ணீர் வைப்பதற்காக எரிவாயு அடுப்பை பற்ற வைத்தார். அப்போது, அதிலிருந்து பரவிய தீ மளமளவென வீட்டில் உள்ள அனைத்துப் பொருள்களிலும் பரவி எரியத் தொடங்கின.
தொலைக்காட்சிப் பெட்டியில் தீப் பற்றியதால், அது வெடித்துச் சிதறியது. இதனால், வீட்டில் இருந்த துணிகள், மரக்கதவு ஆகியவையும் எரிந்தன.
இதில் முருகம்மாளுக்கும், பிரனேசுக்கும் தீக்காயம் ஏற்பட்டது. இருவரது அலறல் சப்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர், இருவரையும் மீட்டு, தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்து தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து தீ மேலும் பரவாமல் அணைத்தனர்.
தீக்காயமடைந்த முருகம்மாளுக்கும், பிரனேஷுக்கும் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து சோலை நகர் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.